திறந்த வெளியில் செயல்பட்ட இறைச்சி கடைகள் அகற்றம்
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி கோட்டூர்ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே இருந்த இறைச்சிக்கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
மேலும் இப்பகுதியில் கடைகள் அமைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். பொள்ளாச்சி நகரில் மார்க்கெட், பல்லடம் ரோடு, நியூஸ்கீம்ரோடு, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே இருக்கும் மாட்டு இறைச்சிகடைகள் திறந்த வெளியில் விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து, அந்த கடைகளை விரைவில் அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் எச்சரிக்கை விட்டனர். அதை தொடர்ந்தும் இறைச்சி கடைகள் விற்பனை தொடர்ந்தன.
இந்நிலையில் அங்கு செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அங்கு இருந்த 6 கடைகள் அகற்றப்படுத்தப்பட்டன. மேலும் இப்பகுதியில் அனுமதியின்றி இறைச்சி கடை அமைத்து விற்பனை செய்ய கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.