தில்லி மாநகராட்சிகளின் ஃபேஸ்புக் மூடல்: மக்கள் குறை கேட்க கால் சென்டர்கள்
ஃபேஸ்புக் என்று அழைக்கப்படும் சமூக வலைத்தளம் வழியாக மக்களின் குறைகளைக் கேட்டுப் பதில் அளித்துவந்த தில்லியின் மூன்று நகராட்சிகளும் தற்போது அதில் பதில் அளிப்பதை நிறுத்திவிட்டன.
ஃபேஸ்புக்கை மூடிவிட்டு கால் சென்டர் வசதியைத் தொடங்கியுள்ள கிழக்கு மாநகராட்சியைப் போல, வடக்கு மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சிகளும் கால் சென்டர் தொடங்க திட்டமிட்டு வருகின்றன.
தலைநகரில் மாநகராட்சிகளின் டி.இ.எம்.எஸ். கமிட்டிகள் ஃபேஸ்புக்கை உருவாக்கி பராமரித்து வந்தன.
துப்புரவு தொடர்பான பணிகள், பென்ஷன் தகவல்கள், உள்ளாட்சித் துறை இயக்குநரின் அறிக்கைகள், சொத்து வரி முதலான அறிவிப்புகள் இந்த சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வந்தன. பொதுமக்களின் புகார்களையும் மாநகராட்சிகள் பெற்றுவந்தன.
ஃபேஸ்புக் மக்களைச் சென்றடையவில்லை என்றும் அதற்கு பதிலாக கால் சென்டர் தொடங்க இருப்பதாகவும் தில்லி மாநகராட்சிகள் தெரிவிக்கின்றன.
“ஃபேஸ்புக்கில் சுற்றறிக்கைகளை வெளியிட்டபோது அதற்குப் போதிய வரவேற்பு இல்லை. ஒவ்வொருவருக்கும் கணினி வசதி இருப்பதில்லை. அதனால், எங்கள் கருத்துகள் மக்களைச் சென்றடையவில்லை.
ஃபேஸ்புக்கை விட கால் சென்டர் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே கிழக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் கால் சென்டரை தொடக்கி குறைகளைக் கேட்டு வருகிறது” என்று வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரி வி.பி. பாண்டே தெரிவித்தார்.
கவுன்சிலர்கள் எதிர்ப்பு: ஆனால் ஃபேஸ்புக் மூடப்பட்டதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். “ஃபேஸ்புக் மூலம் மக்கள் நிறைய புகார்கள் அனுப்பி வந்தனர்.
என்னுடைய பகுதியில் வசிப்போர் அடிக்கடி புகார்கள் தெரிவித்துவந்தனர். அதனால் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிந்தது’ என்றார் ஆண்ட்ரு கன்ஞ் பகுதி கவுன்சிலர் அபிஷேக் தத்.
“ஃபேஸ்புக் பக்கங்களைப் பராமரிக்க போதுமான வசதிகள் இல்லை. போதிய ஊழியர்கள் இல்லாததால் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை’ என்கிறார் தெற்கு தில்லி மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் முகேஷ் யாதவ்.