தினமலர் 23.04.2010
தி.நகரில் ‘பார்க்கிங்‘ வசதி: மக்கள் கருத்து கேட்க முடிவு
சென்னை : தி.நகரில், ‘அன்டர்கிரவுண்ட் பார்க்கிங்‘ கட்டுவது குறித்து பொது மக்களிடம் கருத்து கோர வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தி.நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:வெங்கட்நாராயண சாலை அருகில் மாநகராட்சி விளையாட்டு மைதானம், நடேச முதலியார் பூங்கா உள்ளது. விளையாட்டு மைதானத்தில் ‘பார்க்கிங்‘ கட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.விளையாட்டுத் திடலை, ‘அன்டர்கிரவுண்ட் பார்க்கிங்‘ ஆக மாற்றுவது அதிர்ச்சியளிக் கிறது. இதனால், விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுவர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர்களிடம் ஆலோசனை நடத்தப்படவில் லை.திறந்தவெளி என கருதிக் கொண்டு இங்கு, ‘பார்க்கிங்‘ அமைக்க உள்ளனர்.எனவே, விளையாட்டு மைதானத்தில் அன்டர்கிரவுண்ட் பார்க் கிங் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதற்கு மாநகராட்சி கமினர் ராஜேஷ் லக்கானி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘விளையாட்டு மைதானத்தை பாதிக்காமல், ‘அன்டர்கிரவுண்ட் பார்க்கிங்‘ கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு மைதானம் தொடர்ந்து அப்படியே பராமரிக்கப் படும். நடேசன் பூங்காவில் ‘பார்க்கிங்‘ கட்டும் திட்டமில்லை.இறுதி முடிவெடுக்கும் முன், பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப் படும்‘ என கூறியுள்ளார்.
மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய ‘முதல் பெஞ்ச்‘ விசாரித்தது.மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், ‘பொது மக்களின் கருத்துக்களை கோருகிறோம்.இந்தத் திட்டம் தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்‘ என்றார். ‘முதல் பெஞ்ச்‘ பிறப்பித்த உத்தரவு:வரும் 24ம் தேதிக்குள் மாநகராட்சி சார்பில் பத்திரிகைகளில் நோட்டீஸ் வெளியிட வேண்டும். 30ம் தேதி கருத்து கேட்புக் கூட்டத்துக்கான இடத்தை குறிப்பிட வேண்டும். முதல் கூட்டம் 30ம் தேதி நடக்க வேண்டும். கருத்து கேட்புக் கூட்டம் நடத்திய பின், ஜூன் 14ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இந்த வழக்கு விசாரணை ஜூன் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. மறுஉத்தரவு வரும் வரை, தற்போதைய நிலை தொடர வேண்டும்.இவ்வாறு ‘முதல் பெஞ்ச்‘ உத்தரவிட்டுள்ளது.