தினமலர் 12.08.2010
தி.நகரில் விளையாட்டு மைதானத்தில் வாகன நிறுத்தம் கட்ட ஐகோர்ட் தடை
சென்னை :தி.நகரில் விளையாட்டு மைதானத்தில் தரை தள வாகன நிறுத்தம் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.தி.நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:வெங்கடநாராயண சாலையில் மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேல், மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது.
இதில், தரை தளத்தின் கீழ் “பார்க்கிங்‘ கட்டுவதற்கு மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.விளையாட்டு மைதானத்தை கார் பார்க்கிங் ஆக மாற்றுவது, அந்தப் பகுதி மக்களுக்கு அநீதி இழைப்பது போலாகும்.கருத்து தெரிவிக்க எங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை. தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். எனவே, மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், “பார்க்கிங்‘ கட்டக் கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்‘ விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சர்மிளா விக்டர் ஆஜராகினர். “முதல் பெஞ்ச்‘ பிறப்பித்த உத்தரவு:கடந்த 50 ஆண்டுகளாக இந்த இடத்தை பூங்காவாகவும், விளையாட்டு மைதானமாகவும் பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தப் பகுதி மக்களுக்கு, பொழுதுபோக்கும் இடமாகவும் உள்ளது. இங்கு “பார்க்கிங்‘ கட்டுவதில் பொது நலன் இருப்பதாக தெரியவில்லை.இங்கு வணிக வளாகம் கட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பொது மக்கள் கருத்து கேட்புக்காக வெளியிடப்பட்ட நோட்டீசில், இந்த திட்டம் பற்றி குறிப்பிடப்படவில்லை. மன மகிழ்வுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், வணிக வளாகம் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது.
டில்லியில் மெட்ரோ ரயில் திட்டம், பாலிகா பஜார் திட்டம் பற்றி குறிப்பிட்டு, தங்கள் தரப்பை நியாயப்படுத்த சென்னை மாநகராட்சி முயற்சித்துள்ளது. இந்த வாதம் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டது.குறிப்பிட்ட இடமானது, விளையாட்டு மைதானம் என வரையறுக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஒரு இடத்தை திறந்தவெளி என வரையறுத்தால், பொது நலன் கருதி அதை பாதுகாக்க வேண்டும். இந்த இடத்தின் பயன்பாட்டை மாற்ற முயற்சித்தால், அதை அனுமதிக்கக் கூடாது.எனவே, நிலத்தடி வாகன நிறுத்தம் கட்டுவதற்காக விளையாட்டு மைதானத்தை சென்னை மாநகராட்சி பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது. மாநகராட்சியின் முடிவு சட்டவிரோதமானது. விளையாட்டு மைதானத்தை வேறு காரணங்களுக்கு மாற்றுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு “முதல் பெஞ்ச்‘ உத்தர விட்டுள்ளது.