தினமலர் 10.08.2010
துணை முதல்வரின் தேதிக்காக காத்திருக்கும் நகராட்சி கட்டடம்
வால்பாறை: துணை முதல்வரின் தேதி கிடைக்காததால் நகராட்சி அலுவலகம் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகராட்சி சார்பில் அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணிநிறைவடைந்தது. அதே போல் அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா, ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மாட்டிறைச்சிக்கடை ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.இதே போல் பொதுப்பணித்துறை சார்பில் காட்டேஜ் கட்டும் பணியும், புதிய அரசு கலைக்கல்லூரி கட்டடம் கட்டும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளன.வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நடத்தப்படவுள்ளது. வால்பாறையில் பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு விழாவிற்கும், கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவிலும் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க வுள்ளது.இதற்கான தேதி கிடைக்காததால் வால்பாறையில் நகராட்சி கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.