தினமலர் 22.12.2011
துப்புரவுப்பணி தனியார்வசம்? மாநகராட்சியில் காரசார விவாதம்
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் முக்கியப்பகுதிகளில் துப்புரவுப்பணிகளை மேற்கொள்ள தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து காரசார விவாதம் நடந்தது. திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி மார்க்கெட் பகுதிகளில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதிகளில் குவியும் குப்பைகள் மாநகராட்சிக்கு பெரிய சவாலாக இருக்கிறது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குப்பைகளை அள்ளுவதிலும், கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பதும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நேற்று நடந்த திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டத்தில், “இப்பணிகளை தனியார்வசம் ஒப்படைக்கலாம்’ என்று உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டிருந்தது. தி.மு.க., கவுன்சிலர் அன்பழகன்: அவசரக்கூட்டம் என்றால் 24 மணி நேரத்துக்கு முன்னர் தகவல் அளிக்க வேண்டும் என்றுள்ளது. காலையில் வந்து அவசரக்கூட்டம் என்று அழைப்பது முறையா? கோட்டத்தலைவர் சீனிவாசன்: கடந்தாண்டு இதைவிட மோசமாக அவசரக்கூட்டம் நடந்தது. அதற்கு தற்போது பரவாயில்லை. இனிமேல் எல்லாம் சரியாகிவிடும்.
தி.மு.க., கவுன்சிலர் அன்பழகன்: திருச்சி மாநகராட்சியில் ஏற்கனவே இரண்டு முறை துப்புரவுப்பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் பணி சரியில்லை என்ற காரணத்தினால் ஒப்பந்தம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது, மீண்டும் தனியாரிடம் ஒப்படைப்பது எப்படி சரியாக இருக்கும்?
கமிஷனர் வீரராகவராவ்: கடந்த முறை ஏற்பட்ட பிரச்னைகளை ஆராய்ந்த பின்னரே இப்பொருள் விவாதத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. துப்புரவுப்பணிகள் சிறப்பாக நடக்க கடுமையாக நிபந்தனைகள் விதிக்கப்படும். தி.மு.க., கவுன்சிலர் அன்பழகன்: மாநகராட்சியில் இருந்த 2,250 துப்புரவுப்பணியாளர்களில் பலர் ஓய்வுப்பெற்று, தற்போது 1,500 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். தனியாரிடம் ஒப்படைப்பதுக்கு பதில், துப்புரவுப்பணியாளர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்கலாமே?

கமிஷனர் வீரராகவராவ்: அரசு உத்தரவின்படி, புதிய ஆட்கள் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், நாம் நேரடியாக யாருக்கும் வேலை கொடுக்க முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது. இறுதியில், “திருச்சி மாநகராட்சி துப்புரவுப்பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்’ என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.