தினகரன் 12.03.2013
துப்புரவு தொழிலாளருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
உடுமலை: உடுமலை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் சோபனா துவக்கி வைத்தார். ஆணையர் கன்னையா முன்னிலை வகித்தார். உடுமலை அரிமா சங்கம், கீதா கண் மருத்துவமனையுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. 240 துப்புரவு பணியாளர்களும் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
தேவையான நபர்களுக்கு சொட்டு மருந்து, கண் பார்வைக்கு தேவையான சத்துமாவு, சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் சோபனா தனது சொந்த செலவில், 32 பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் ஹக்கீம், சோபா, வனிதாமணி, ஆறுமுகம், கண்ணம்மாள், டாக்டர் கீதா, சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, சிவக்குமார் செல்வம் மற்றும் பலர் பங்கேற்றனர்.