தினமணி 14.05.2010
துப்புரவு பணி மீண்டும் தனியார் வசம்
சேலம், மே 13: சேலம் மாநகரில் உள்ள 21 வார்டுகளில் துப்புரவு பணி மேற்கொள்ளும் பொறுப்பு மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி 4 மண்டலங்களிலும் 60 வார்டுகள் உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநகர் முழுவதும் துப்புரவுப் பணிகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களே செய்து வந்தனர். இவர்கள் மெத்தனமாக நடந்து கொள்வதாகக் கூறி மாநகரின் மூன்றில் ஒருபங்கு வார்டுகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 2, 7, 12 முதல் 19, 23 முதல் 27, 29 முதல் 33 மற்றும் 47 ஆகிய 21 வார்டுகளிலும் குப்பை அள்ளும் பணிகள் ஸ்வச்தா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தினர் 700 பணியாளர்கள் மூலம் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 2010-ம் ஆண்டுடன் இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைகிறது. இதையடுத்து 21 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை மீண்டும் தனியாரிடமே ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்கான அறிவிப்பு அண்மையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த டெண்டர் பெட்டியில் ஒப்பந்தம் கோருபவர்கள் காலை 9 மணி முதல் விண்ணப்பங்களைப் போட்டனர்.
டெண்டர் நடைபெறுவதையொட்டி மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு டவுன் போலீஸôர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.