தினத்தந்தி 27.06.2013
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க
நடவடிக்கை மேயர் சசிகலா புஷ்பா நீரேற்று நிலையத்தில் ஆய்வு
குடிநீர் வினியோகம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நீடித்து
வருகிறது. சில பகுதிகளில் 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்
செய்யப்பட்டு வந்தது. இதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள்
உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தற்போது தாமிரபரணி ஆற்றில்
தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், தண்ணீர் பம்பிங் செய்யும் பணியை
துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் வல்லநாடு
நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்களை பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.
ஆய்வு
இந்த பணியை மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா நேற்று நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார். தொடர்ந்து வல்லநாடு தெப்பம் அமைந்து உள்ள பகுதியையும்
பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி
ஆணையாளர் சோ.மதுமதி, என்ஜினீயர் ராஜகோபால், இளநிலை என்ஜினீயர் சரவணன்
மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.