தினமலர் 14.02.2010
தெருநாய்களை பிடிக்க டெண்டர்: கமிஷனர்
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் திரியும் தெருநாய்களை பிடித்து வனப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல டெண்டர் கோரப் பட்டுள்ளதாக, கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார். எஸ்.எஸ்.காலனி வித்யா மேல்நிலை பள்ளியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை மேயர் தேன்மொழி துவக்கிவைத்தார். விழாவிற்கு கமிஷனர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார். சுகாதார குழு தலைவர் ராலியாபானு, உதவி நகர்நல அலுவலர் யசோதமணி, பி.ஆர்.ஓ., பாஸ்கரன் கலந்து கொண்டனர்.
கமிஷனர் கூறியதாவது: மதுரையை குப்பையில்லாத நகரமாக மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நான்கு மாசி, வெளி வீதிகளில் பகல், இரவில் அதிகளவு பணியாளர்களை நியமித்து, குப்பைகள் அகற்றப்படுகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்த ஆட்டோ, வாகனங்கள் மூலம் வீரியமிக்க புகை மருந்து வார்டு வாரியாக அடிக்கப்படுகிறது. சாலை மற்றும் தெருவோரங்களில் தேங்கிய தண்ணீரை உடனுக்குடன் அகற்ற சுகாதார ஆய் வாளர் களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தெருவில் திரியும் நாய்களை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல டெண்டர் விடப் பட்டுள்ளது. இரண்டு 24 மணி நேர மருத்துவமனைகள், 17 மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் திட்டத்தின்கீழ் மூன்று லட்சம் பேர் பயனடைந்துள்ளனர், என்றார்.