தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
திருவத்திபுரம் நகராட்சி சார்பில் தெரு நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சிப் பகுதிகளில் திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து அதன் இனப்பெருக்கத்தை குறைக்குமாறு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதன் பேரிலும் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் புதன்கிழமை மேற்கண்ட பணி செய்யாறில் நடைபெற்றது.
திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ் ஆகியோர் பணியை மேற்பார்வையிட்டனர்.
சுகாதார ஆய்வாளர் கே.மதனராசன் தலைமையில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 25 நாய்களை பிடித்தனர். கால்நடை மருத்துவர் எம்.அன்பழகன், நாய்களுக்கு ரேபீஸ் நோய் தடுப்பூசி போட்டு கருத்தடை சிகிச்சை அளித்தார்.