தினகரன் 19.08.2010
தெரு விளக்குகளில் மின் சிக்கனம் புதிய கருவி அறிமுகம்; மாநகராட்சிக்கு செலவு மிச்சம் ? வி.சி.மணி
சென்னை, ஆக. 19: சென்னை மாநகர் முழுவதும் உள்ள தெரு விளக்குகளை சென்னை மாநகராட்சியே நிறுவி&பராமரித்து வருகிறது. தினமும், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 410 தெரு விளக்குகளும், 117 உயர் கோபுர மின் விளக்குகளும் இரவு நேரங்களில் எரிய விடப்படுகின்றன. இதற்காக மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் மின் கட்டணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.
சென்னையில் பெருகி வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, மாநகராட்சி சார்பில் பயன்படுத்தும் தெரு மின்விளக்கு பயன்பாட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி, செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தெரு விளக்குகளுக்கான மின்சாரத்தை சிக்கனம் செய்ய, ‘மின் சேமிப்பு திட்டம்’ சென்னையில் முக்கிய சாலைகளில் அறிமுகம் செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
சென்னையில் தெரு விளக்குகள் மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை எரிய விடப்படுகிறது. ஒவ்வொரு சாலையில் உள்ள 30 முதல் 50 தெரு விளக்குகளை ஆன், ஆப் செய்ய ஒரு கண்ட்ரோல் பாக்ஸ் வைக்கப்பட்டு இருக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் வெளிச்சத்தின் அளவை (வோல்டேஜ்) குறைப்பதின் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
இதற்கு வசதியாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘மின் சேமிப்பு கருவி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை என 60 இடங்களில் மின் சேமிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியில் ஜிஎஸ்எம் மோடம், ரிமோட் சென்ட்ரல் மானிட்டரிங் ஸ்டேஷன், வோல்டேஜ் குறைக்க டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் சேமிப்பு கருவியை ஆன், ஆப் செய்ய கன்ட்ரோலர் யூனிட் ஆகியவை இருக்கும்.
மின் சேமிப்பு கருவியில் இரவு எத்தனை மணிக்கு விளக்கு எரிய வேண்டும், எத்தனை மணிக்கு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், இரவு 11 மணிக்கு மேல் வோல்டேஜ் அளவை குறைப்பது பற்றியும் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும். அதன்படி அந்த நவீன கருவி தானாகவே இயங்கும். அந்த கருவியின் கட்டுப்பாட்டில் உள்ள தெரு மின்விளக்குகள் ஏதாவது எரியவில்லை என்றாலும் அதை அறிந்து மின் ஊழியர்களை அனுப்பி சரி செய்ய இயலும்.
சென்னை முழுவதும் 2,000 மின் சேமிப்பு கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டு, சோதனை அடிப்படையில் 60 இடங்களில் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மட்டும் கடந்த ஒரு சில மாதங்களில் க்ஷீ 7.33 லட்சம் மதிப்பு மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் மின் சேமிப்பு கருவிகள் பொருத்தப்பட்டால் 30 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். செலவு கணிசமாக குறையும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.