தினமணி 18.06.2010
தெரு விளக்கு எரியும் நேரத்தைக் குறைக்க வேண்டுகோள்
தேவகோட்டை, ஜூன் 17: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தேவையில்லாத நேரங்களில் எரியும் தெரு விளக்குகளை நிறுத்தி மின்சாரத்தை சிக்கனப்படுத்த மருதுபாண்டியர் சமூக நல கழக நிறுவனர் வழக்கறிஞர் ராஜமாணிக்கம் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேவகோட்டை நகராட்சியில் தெருவிளக்கு எரியும் நேரத்தை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை என நிர்ணயித்து முன்கூட்டியே தானாக எரிந்து அணைந்து விடுமாறு பதிவு செய்து வைத்துள்ளனர்.
முன்பு கையால் பராமரிக்கும்போது காலையில் பொழுது புலர்ந்தவுடன் தெரு விளக்குகள் அணைக்கப்படும். ஆனால் தற்போது இப்பகுதியில் மாலை 6.45 மணிக்கு மேல்தான் இருள் வருகிறது. அதேபோல் காலை 5.15 மணிக்கெல்லாம் பொழுது புலர்ந்து நல்ல வெளிச்சம் வந்துவிடுகிறது. என்வே நேரத்தை காலத்திற்குத் தகுந்தவாறு ஒவ்வொரு மாதமும் மாற்றி வைக்கவேண்டும். தற்போது மாலை 6.30 முதல் காலை 5.30 மணி வரை தெருவிளக்குகளை எரிய விடலாம். இதனால் ஒரு மணிநேரம் கூடுதல் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் அதிக அளவில் சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறார்கள். இவற்றுக்கு மின்சாரம் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு சோடியம் விளக்குக்குப் பதிலாக ஐந்து குழல் விளக்குகளை பொருத்தலாம் என மின்வாரியத் துறையினர் கூறுகின்றனர்.
நகரில் ஆயிரம் சோடியம் விளக்குகளுக்கு மேல் தற்போது உள்ளன. எதிர்காலத்தில் இவற்றைப் பொருத்தாமல் அதிக இடங்களில் குழல் விளக்குகளை பொருத்தலாம். கடுமையான மின்தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டாலே மின் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்றார்.