தினமணி 30.09.2009
தெற்கு மண்டலத்தில் மேயர் ஆய்வு
மதுரை, செப். 29: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குள்பட்ட 41, 60, 61, 64 ஆகிய வார்டுப் பகுதிகளில் மேயர் ஜி. தேன்மொழி, ஆணையர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வுசெய்தனர்.
எம்.கே. புரத்தில் உள்ள முத்து சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து, பாதாளச் சாக்கடை மூடியை உயர்வாக வைத்து சாலையை உடனடியாக அமைக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். கோவலன் பொட்டல் பகுதியில் மாநகராட்சி கழிவுநீரேற்று நிலையத்தை ஆய்வுசெய்து, நீரேற்று நிலையத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார். கோவலன் நகரில் சத்துணவு மையத்தை பார்வையிட்ட அவர், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ் புதிய சத்துணவு மையம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யவும், ஒரு பகுதியில் புதிய நூலகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து மேலமாசி வீதி – வடக்குமாசி வீதி சந்திப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யுமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது, மண்டலத் தலைவர் அ. மாணிக்கம், கவுன்சிலர்கள் பழனிச்சாமி, சித்ரா, கலைமதி, தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், நகரமைப்பு அலுவலர் முருகேசன், நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம் உள்பட பலர் இருந்தனர்.