தினமலர் 24.02.2010
தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியருக்கு புது தெம்பு!: மாநகராட்சி பள்ளிகளில் சுடச்சுட சுண்டலுடன் டீ
தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியருக்கு தெம்பு அளிக்க, ஒரு சில மாநகராட்சி பள்ளிகளில் மாலை நேரத்தில் சுடச்சுட சுண்டல், பட்டாணி, டீ வழங்கப்படுகிறது. கல்வீரம்பாளையத்திலுள்ள அரசு பள்ளியிலும் இதே முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகள் அனைத்திலும் இதை நடைமுறைப்படுத்தினால் மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.
மார்ச் முதல் தேதியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டு 88 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 95 சதவீத தேர்ச்சி எனும் இலக்கு நிர்ணயித்து, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி வலியுறுத்தி வருகிறார். படிப்பில் பின்தங்கிய மாணவர்களை தேர்வு செய்து காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளிகளுக்கு பாடவாரியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் முறை, இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டுள்ளதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்சி அளித்து வருகின் றனர். மாணவர்களின் கல்வித்திறனை “சுமார்‘, “நன்கு படிப்பவர், “வீக்‘ என மூன்று பிரிவுகளாக பிரித்து, பயிற்சி தருகின்றனர். ஆனால், தேர்ச்சியை உயர்த்த வெறும் பயிற்சி மட்டும் போதாது. மாலை நேர பசியாலும், அசதியாலும் மாணவ, மாணவியர் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். பல பள்ளிகளில் “விட்டால் போதும்‘ என்ற எண்ணத்துடன் கொட்டாவி விட்டபடி சிறப்பு வகுப்புகளில் அமர்ந்துள்ளனர்.
மாணவர்களின் தேவையை புரிந்து கொண்ட மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, ஏழை மாணவர்கள் அதிகளவில் படிக்கும் சில மாநகராட்சிப் பள்ளிகளில் மாலை நேரத்தில் சுண்டல், டீ வழங்க ஏற்பாடு செய் துள்ளார். மாநகராட்சியில் இருந்து இதற்கென தனியாக தி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு பள்ளிகளில் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆனால், கல்வீரம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சொந்த செலவில் சுடச்சுட வேக வைத்த சுண்டல், பட்டாணி, டீ அளித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.
இது பற்றி, பாலகிருஷ்ணன் கூறியதாவது:பள்ளிக்கு காலை 8.30 மணிக்கு வரும் மாணவர்கள், மாலை 6.00 மணிக்கு மேல்தான் வீடு திரும்புகின்றனர். காலையில் அவசரமாக சாப்பிட்டும் சாப்பிடாமலும் கிளம்பி வந்து விடுகின்றனர். சில மாணவர்கள் மதியமும் சாப்பிடுவதில்லை. பசி, அசதியுடன் காணப்படும் மாணவர்களால் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் முழு கவனம் செலுத்த முடிவதில்லை. இதை தவிர்க்க, முந்தைய நாளில் சுண்டல் அல்லது பட்டாணி வாங்கி ஊற வைத்து மறுநாள் வேக வைத்து, சுடச்சுட தருகிறோம். வடை போன்ற எண்ணெய் பலகாரங்கள் தருவதை விட பட்டாணி, சுண்டல் அளிப்பதால் உடலுக்கு தெம்பு கிடைக் கிறது. அடுத்த ஒரு மணி நேரம் உற்சாகமுடன் �டங்களை படிக்க இதில் இருந்து கிடைக்கும் சக்தி போதுமானது. எனது சொந்த நிதியில் இதுவரை செய்து வருகிறேன்; விருப்பமுள்ளோரும் உதவலாம். இவ்வாறு, பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதே போல், அனைத்து அரசு பள்ளிகளிலும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் மாலை நேர பசி மயக்கத்தை போக்கினால், நிர்ணயித்த 95 சதவீத தேர்ச்சி இலக்கை எளிதாக எட்ட முடியும் என்கின்றனர், ஆசிரியர்கள்.
– நமது நிருபர் –