தினமலர் 03.11.2010
நகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை
உடுமலை: உடுமலை நகரில், குடியிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைக்கப்பட்ட ஓட்டுசாவடிகளில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை மாற்றியமைக்க வேண்டும் என அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க., நகர செயலாளர் சண்முகம் நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:
உடுமலை நகரில் வரும் சட்டசபை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் சில வாக்காளர்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. 184 பாகத்திலுள்ள வீதியில் உள்ள வாக்காளர்களுக்கு ஏரிப்பாளையம் தொடக்க பள்ளி ஓட்டுச்சாவடியாக உள்ளது. இந்த பள்ளி வாக்காளர் குடியிருப்பில் இருந்து வெகு தொலைவிலும், போதிய போக்குவரத்து வசதி இல்லாமலும் உள்ளது. இதே போல், பாகம் எண் 217 அமீர் மிர் கவுஸ், அமீர் லே–அவுட், கங்காதரன் லே–அவுட், வாக்காளர்களுக்கு டி.வி., பட்டணம் ஓட்டுச்சாவடியிலிருந்து மாற்றி ராமசாமி நகர் பள்ளி சாவடியில் சேர்க்க வேண்டும்.ருத்ரப்ப நகர் 1 முதல் 9 வீதி வரை உள்ள வாக்காளர்களுக்கு ருத்தரப்பநகர் பள்ளியிலும், பழைய அக்ரஹாரம் பகுதியினருக்கு எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியிலும், சின்னசாமி லே–அவுட், குமரன் லே–அவுட், கொங்குரார் லே–அவுட், வாக்காளர்களுக்கு டி.வி., பட்டணம் பள்ளி சாவடியில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.வி., பட்டணம் 1,2,3,4 பகுதி வாக்காளர்களுக்கு பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை ஓட்டுச்சாவடியை மாற்றி, அருகிலுள்ள டி.வி., பட்டணம் துவக்கப்பள்ளி சாவடியில் சேர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதியின் அருகில் ஓட்டுச்சாவடி அமைவதால் வாக்காளர்கள் ஓட்டளிக்க எளிதாக அமையும். புதிய வாக்காளர் சேர்க்கைக்கான காலக்கெடுவையும் நீட்டிக்க வேண்டும்‘, இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.