தினமணி 04.02.2010
நகராட்சி துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை சீரமைக்க உத்தரவு
சிதம்பரம்,பிப். 3: சிதம்பரத்தில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது குறித்து “தினமணி‘யில் புகைப்படத்துடன் வெளியான செய்தியையடுத்து, அதை சீரமைக்குமாறு மத்திய அரசு பழங்குடியினர் நல தேசிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
÷குடியிருப்பின் அவல நிலை குறித்து வெளியான செய்தியையடுத்து, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி மக்கள் குறைதீர்க்கும் பிரிவு செயலர் ஏ.வி. வீரராகவன், இதுகுறித்த செய்திக் குறிப்புடன் பழங்குடியினர் நல தேசிய ஆணைய இயக்குநருக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அனுப்பினார்.
÷இதையடுத்து, துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை உடனடியாக நேரில் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை பழங்குடியினர் நல தேசிய ஆணையத்துக்கு விரைவாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமனுக்கு பழங்குடியினர் நல தேசிய ஆணையத்தின் இயக்குநர் இ. தசரதன் உத்தரவிட்டுள்ளார்.