தினமலர் 17.05.2010
நல்லூர் நகராட்சியில் வடிகால் வசதியில்லை
திருப்பூர்:முறையான வடிகால் வசதியில்லாமல், நல்லூர் நகராட்சியின் எட்டாவது வார்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.எட்டாவது வார்டு பி.கே.எம்.ஆர்., நகரில் வடிகால் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் மழைநீர் ஆங்காங்கே தேங்குவதால் சுகாதாரக்கேடு உருவாகி வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில், ‘பி.கே.எம்.ஆர்., நகரில் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. முறையான வடிகால் வசதியில்லை; ரோடு மோசமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேற வழியில்லை. கழிவு நீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது; கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. உடனடியாக, நகராட்சி நிர்வாகம் வடிகால் வசதி மற்றும் ரோடு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து வார்டு கவுன்சிலர் விஜயகுமார் கூறுகையில், தாராபுரம் மெயின் ரோட்டை ஒட்டி பி.கே.எம்.ஆர்., நகர் அமைந்துள்ளது. பி.கே.எம்.ஆர்., நகரில் இருந்து சந்திராபுரம் குட்டை வரை வடிகால் அமைக்க அதிக தொகை செலவிட வேண்டும். தாராபுரம் மெயின் ரோட்டில் மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலை துறை சார்பில், வடிகால் வசதி ஏற்படுத்தினால், அதனுடன் இணைந்து விடலாம். வடிகால் அமைப்பது தொடர்பாக, மீண்டும் நகராட்சியில் கோரிக்கை வைக்கப்படும்,” என்றார்.