தினமலர் 26.11.2010
நல்லூர் நகராட்சி பகுதிக்கென துணை மின் நிலையம் தேவை
திருப்பூர்
: “நல்லூர் நகராட்சி பகுதிக்கென தனியாக துணை மின் நிலையம் அமைத்து, மின் வினியோக பிரச்னையை தீர்க்க வேண்டும்‘ என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லூர் நகராட்சி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. மின் சப்ளை போதுமான அளவு இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றன. மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாவதும் வாடிக்கையாகி விட்டது. 100 வாட்ஸ் திறன் கொண்ட பல்பு, 40 வாட்ஸ் போல் எரிகிறது. குண்டு பல்புகளின் பயன்பாடு குறைந்து, டியூப் லைட்டுகள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அவை, குறைந்த மின்சாரத்தில் எரிவதில்லை.பேன், மிக்ஸி, கிரைண்டணர், எலக்ட்ரிக் ஸ்டவ், “டிவி‘, பிரிட்ஜ் என வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை உபயோகித்தே பயன்படுத்த முடியும். மின் வினியோக பிரச்னையால், இப்பொருட்கள் அடிக்கடி பழுதாவதால், பலர் வருத்தத்தில் உள்ளனர். பொதுமக்கள் கூறுகையில்,”குறைந்த வோல்டேஜ் இருப்பதால், மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மின்வெட்டோடு, மின்வினியோக பிரச்னை பெரும் சிரமத்தை கொடுக்கிறது. இரவு 10.00 மணி வரை குறைந்த வோல்டேஜ் மின்சாரமே கிடைக்கிறது. திருப்பூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலமாக மாறும் நல்லூரில், புதிய துணை மின் நிலையம் உருவாக்க வேண்டும். விஜயாபுரம் அல்லது சென்னிமலை பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். நல்லூர் நகராட்சி பகுதி மட்டுமின்றி, அருகிலுள்ள படியூர், முதலிபாளையம், முத்தணம்பாளையம், பெருந்தொழுவு ஊராட்சி பகுதிகளும் பயனடையும் வாய்ப்புள்ளது. மேலும், நல்லூரில் இருந்து மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்பு பெறுவதற்கும் திருப்பூருக்கு செல்ல வேண்டும். நல்லூரில் மின் இணைப்பு மற்றும் பில் செலுத்தும் வசதி செய்ய வேண்டும்; இதற்கென அலுவலகம் உருவாக்க வேண்டும்,’ என்றனர்.