தினமலர் 01.04.2010
நாகை நகராட்சி கூட்டம்
நாகை: நாகை நகராட்சி கூட்டம் தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. ஆணையர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்:லட்சுமி: எனது வார்டு கடற்கரை சாலையில் மின்விளக்குகள் அமைக்கவேண்டும். தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தில் எனது வார்டையும் சேர்க்க வேண்டும்.
ஆணையர்: பாதாள சாக்கடை திட்டப்பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் தான் செயல்படுத்துகிறது. எனவே உங்கள் கோரிக்கையை நகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட தாட்கோ அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம்.
தாமரைச்செல்வம்: நம்பியார் நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணற்றையும், கழிவுநீர் வாய்க்காலையும் செப்பனிட்டு தரவேண்டும்.
பரணிக்குமார்: நாகை அக்கரைக்குளம் வடகரை, மேல்கரை, நியூ ஆர்ச் தெரு ஆகிய சாலைகளை செப்பனிடவும், உரக்கிடங்கின் நுழைவு வாசலில் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
தொடர்ந்து கூட்டத்தில் நாகூர் ஆண்டவர் தர்கா கந்துரி விழா மே மாதம் 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. எனவே பொது சுகாதாரப்பணிக்கு தற்காலிக துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிருமி நாசினி, எரிபொருள், தளவாட பொருட்கள் வாங்கவும், வாடகை டிராக்டர் வாங்கவும் ரூ.6 லட்சத்து 72 ஆயிரத்து 700ஐ மன்றத்தின் அனுமதிக்கு வைப்பது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.