தினமலர் 27.07.2013
நான்கு அடுக்கு குடியிருப்புக்கு திட்ட அனுமதி மறுப்பு சி.எம்.டி.ஏ., உத்தரவு செல்லும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை:”சென்னையை அடுத்த, பூந்தமல்லி தாலுகாவில், 396 வீடுகள் அடங்கிய, நான்கு அடுக்கு குடியிருப்பு கட்ட, திட்ட அனுமதி வழங்க மறுத்தது செல்லும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லி தாலுகாவில், மேலகரம் மற்றும் அகரமேல் கிராமத்தில், 396, வீடுகள் அடங்கிய, தரை மற்றும் நான்கு அடுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு, திட்ட அனுமதி கோரி, சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்திடம், தனியார் கட்டுமான நிறுவனம் விண்ணப்பித்தது. சாலையின் அகலம் போதுமானதாக இல்லை என்பதால், விண்ணப்பத்தை, சி.எம்.டி.ஏ., நிராகரித்தது.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், கட்டுமான நிறுவனம் சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திட்ட அனுமதி வழங்கும்படி, சி.டி.எம்.ஏ.,க்கு உத்தரவிடக் கோரப்பட்டது. சாலையின் அகலம் பற்றி சர்ச்சை உள்ளதால், அட்வகேட் கமிஷனரை, ஐகோர்ட் நியமித்தது. அவரும், கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, திட்ட அனுமதி வழங்கும்படி, சி.எம்.டி.ஏ.,க்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில், சி.எம்.டி.ஏ., தரப்பில், அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, “முதல் பெஞ்ச்’ விசாரித்தது.
சி.எம்.டி.ஏ., சார்பில், கூடுதல் அட்வகேட் – ஜெனரல் அரவிந்த்பாண்டியன், வழக்கறிஞர் ராஜா சீனிவாஸ், “”திட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, வீட்டுவசதி செயலரிடம் அப்பீல் செய்யவில்லை. அட்வகேட் கமிஷனரின் அறிக்கை, தோராயமாக உள்ளது. சட்டப்படி, தேவையான அளவுக்கும் குறைவாக தான், சாலையின் அகலம் உள்ளது,” என, வாதாடினர்.
மனுவை விசாரித்த, “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
அட்வகேட் கமிஷனரின் அறிக்கைக்கு, சி.எம்.டி.ஏ., தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டும், அதை, பரிசீலிக்கவில்லை. “திட்ட அனுமதி வழங்கினால், அங்கு குடியிருப்புகள் வரும்; மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்; குறைந்தபட்ச சாலை அகலம் இருந்தால் தான், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும்; இல்லையென்றால், அசவுகரியம் ஏற்படும்’ என, கூடுதல் அட்வகேட்ஜெனரல் தெரிவித்தார்.
இதுபோன்ற அனுமதியை வழங்கினால், மற்ற கட்டுமான நிறுவனங்களும், களத்தில் குதித்து விடுவர். தங்களுக்கும் அனுமதி கோருவர். சட்டப்படி தேவையான அளவு இல்லாததால், அனைத்து அம்சங்களையும் பரிசீலித்தே, திட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. ரிட் மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.