தினமணி 02.09.2010
நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
காரைக்கால், செப். 1: காரைக்கால் மாவட்டத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவற்றை பிடித்து, கருத்தடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, கால்நடைத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
காரைக்கால் மாவட்டத்தில் நாய்களால் ஏற்படும் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிராங்க்ளின் லால்தின்குமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நாய்களை கொல்லக்கூடாது என்ற நீதிமன்ற ஆணை இருப்பதையொட்டி, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, கருத்தடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காரைக்கால் நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்களும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த நடவடிக்கையை உடனடியாகத் தொடங்குமாறும், ஒவ்வொரு 15 நாள்களில் எத்தனை நாய்கள் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தமக்கு தெரிவிக்குமாறும் ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட முதுநிலைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த், நகராட்சி ஆணையர் ஜோஸ்பேட்டன், கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஆணையர்கள் தாமரைச்செல்வன், பாலன், சுபாஷ், அப்துல்வஹாப், செல்லதுரை மற்றும் கால்நடைத் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் லதாமங்கேஷ்கர், டாக்டர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.