தினமலர் 07.10.2010
நாய் பிடிக்கும் பணி ஜரூர்
சேலம்: கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நேற்று 24 நாய்கள், ஐந்து பன்றிகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.சேலம் மாநகர பகுதியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வார்டுகளில் இரவு நேரத்தில் வெளியில் தலைகாட்டவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஹாயாக உலா வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுடன் சேர்ந்து கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தொடர்ந்து சர்ச்சைகள் எழும்போது மாநகராட்சியில் அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். நேற்று கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட சின்னையன் காலனி, கோவிந்தம்மாள் நகர், அழகு நகர், பெருமாள் கோவில் மேடு ஆகிய பகுதிகளில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த 24 நாய்கள், ஐந்து பன்றிகள் பிடிக்கப்பட்டது.