தினமணி 23.07.2009
நாளை மறுநாள் மகளிர்க்கு சுயதொழில் பயிற்சி
மதுரை, ஜூலை 22: மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சார்பில், மகளிர் சுயதொழில் துவங்குவது தொடர்பான பயிற்சி முகாம் இம்மாதம் 25-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மடீட்சியா தலைவர் என். சோமசுந்தரம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மடீட்சியா வர்த்தகத் தகவல் மையத்தின் மூலம் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தொழில் துவங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேண்டிய தகவல்கள், நிதியுதவி திட்ட அறிக்கை தயார் செய்து தருதல், இயந்திரம், தளவாடங்களின் உற்பத்தியாளர்களின் விவரங்கள் மற்றும் ஏற்றுமதி பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இம்மையத்தின் சார்பில், சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள மகளிருக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. மடீட்சியா கூட்ட அரங்கில் சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.
மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பெண்கள் இதில் கலந்துகொள்லாம். தொழில் வாய்ப்புகள் பெறும் வழிமுறைகள், சுயதொழில் துவங்குவதற்கான வழிமுறைகள், கடன்பெறும் வழிமுறைகள், இயந்திரங்கள் பற்றிய விவரங்கள், தொழில் முதலீடு, மார்க்கெட்டிங் போன்றவை குறித்து அனுபவம் வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் விளக்கம் அளிப்பார்கள். சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் இம் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்க சலுகைக் கட்டணம் ஒருவருக்கு ரூ. 100 மட்டுமே செலுத்தவேண்டும். முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு இணைச் செயலர்–பொறுப்பாளர், மடீட்சியா வர்த்தக தகவல் மையம், டாக்டர் அம்பேத்கர் சாலை, மதுரை-20 என்ற முகவரியிலோ அல்லது “0452 4393965′ என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.