தினமணி 08.09.2009
நிலுவை வரி கட்டாத வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
சேலம், செப்.7: சேலம் மாநகரில் நிலுவை வரி கட்டாத ஐந்து வீடுகளின் குடிநீர் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன. மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக நிலுவை வரி கட்டாதவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்துவரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
குடிநீர் வரி நிலுவையாக ரூ.3 கோடி உள்ளது.
நிலுவை வரியை வசூலிக்க சிறப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாள்தோறும் மண்டலங்களில் தலா ஒரு வார்டு வாரியாக சென்று வரிகளை வசூல் செய்து வருகின்றனர்.
முதல்நாளான திங்கள்கிழமை நடமாடும் வாகன வரி வசூல் மையம் சார்பில் ரூ.3 லட்சத்து 7 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. சூரமங்கலத்தில் வரி செலுத்தாத வீட்டு உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். மேலும் ஐந்து வீடுகளின் குடிநீர் இணைப்புகள் அதிரடியாக துண்டிக்கப்பட்டன. வரி வசூல் பணியில் உதவி ஆணையர் தங்கவேல், வருவாய் அலுவலர்கள் ரங்கநாயகி, சண்முகம், இளங்கோவன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.