தினமலர் 31.03.2010
நீச்சல் வீரர்களுக்கு மாநகராட்சி பயிற்சி: மேயர் தகவல்
சென்னை:’சென்னை மாநகராட்சியில் நீச்சல் வீரர்கள் குழு அமைக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் பலருக்கு பயிற்சி அளிக்கப்படும்‘ என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மெரீனா கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் மணல் ஜலிக்கும் இயந்திரம், மெரீனா நீச்சல் குளத்தில் தானியங்கி நுழைவுச் சீட்டு வழங்கும் கருவியை, மேயர் சுப்ரமணியன் நேற்று இயக்கி வைத்து கூறியதாவது:
உலகிலேயே அழகான கடற்கரையாக மெரீனா கடற்கரை மாற்றப்பட்டுள்ளது. 17 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கடற்கரை மேம்படுத் தப்பட்டதோடு, மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தெரு விளக்குகள், அலங்கார விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. மெரீனா கடற்கரையை பராமரிக்க 68 மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் மெரீனா நீச்சல் குளம் சீரமைக்கப் பட்டதோடு மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் கூடுதலாக இரண்டு நவீன கழிவறைகள் கட்டப்படும். சுத்திகரிக் கப் பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கடற்கரை மணற் பகுதியில் சுத்தம் செய்யும் வகையில், கல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்தெடுக்க 32 லட்சத்து 67ஆயிரம் ரூபாய் மதிப்பில் டிராக்டருடன் கூடிய மணல் ஜலிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
மெரீனா நீச்சல் குளத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் வருவதால் அவர்களுக்கு நுழைவு சீட்டு கொடுக்க தானியங்கி நுழைவுச் சீட்டு வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள இந்த இயந்திரத்தில் மெரீனா நீச்சல் குளத்திற்குள் செல்பவர்கள் ரூபாய் நோட்டுகளை வைத்தால் ஒரு மணி நேரத்திற்கு தேவையான 15 ரூபாய் கட்டணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள சில்லரையை திரும்ப வழங்கும்.
இதில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர் மாநில தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.மேலும், நீச்சல் பயிற்சியை ஊக்குவிக்க பொது மக்கள், மாணவர்கள் என்று தனித்தனியே நீச்சல் வீரர்கள் குழு அமைக்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
வடசென்னை மக்கள் பயன் பெறும் வகையில் மயிலேரிஸ் பூங்காவில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தை 20 நாட்களில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.இவ்வாறு மேயர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறிய சந்துக்களில் சென்று குப்பை, கட்டட இடிபாடுகளை அகற்ற வசதியாக, 26 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில், ‘ஸ்கிட் ஸ்டிர் லோடர்‘ (சிறிய வகை லோடர்) மூன்று வாகனங்களும் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் பூங்கா களில் புற்களை சமமாக வெட்டும், ‘லான் மூவர்‘ கருவி ஒன்றும், ஆறு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் நடைபாதையை பெருக்கி சுத்தம் செய்யும், அமர்ந்து இயக்கும் இயந்திரப் பெருக்கி கருவியும், பூங்காக்களில் செடி, மரங்களை தேவையான அளவு வெட்டி விடும் வகையில், ‘ட்ரீ புருனர்‘, ‘பிரஷ் கட்டர்‘, ‘எட்ஜ் டிரம்மர்‘,போன்ற கருவிகளை மேயர் அந்தந்த துறை ஊழியர் களிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, பணிகள் நிலைக்குழு தலைவர் சுரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.