தினகரன் 03.08.2010
நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு தெருநாய்களுக்கு கு.க. அறுவை நகராட்சி நிர்வாகம் அதிரடி
பொள்ளாச்சி, ஆக. 3: பொள்ளாச்சி நகரில் பொதுமக்களை சிரமப்படுத்தி வந்த தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக துவங்கியுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட மகாலிங்கபுரம், மரப்பேட்டை, நேதாஜி ரோடு, குமரன் நகர், கண்ணப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் ரோட்டில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை துரத்திச் சென்று கடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடையே நீண்ட வாக்குவாதமும் நடைபெற்றது.
மன்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பலரும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களில் பல வெறிநாய்களாக உள்ளன. இவற்றால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த நகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கொல்வதற்கு அனுமதி கிடையாது. தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டால் விரைவில் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்து இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர். இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இந்நிலையில், தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கான நவீன கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் வரதராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி அறுவை சிகிச்சை அரங்கை திறந்து வைத்தார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் வரதராஜ் கூறியதாவது:
நகரின் பல இடங்களிலும் தெருவில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாக புகார் வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கென நகராட்சிக்குச் சொந்தமான நல்லூரில் உள்ள குப்பை கிடங்கு அருகே ரீ4 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை அறை கட்டி முடிக்கப்பட்டது. அதன் அருகிலேயே நாய்களை அடைத்து வைக்கவும் அறை அமைக்கப்பட்டுள்ளது. அதி நவீன கருவிகளைக் கொண்டு கால்நடை மருத்துவர் மூலம் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணி இன்று (நேற்று) முதல் துவங்கியுள்ளது. நகரில் உள்ள 36 வார்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் மூலம் தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து இங்கு கொண்டு வரப்படும். நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதன் பிறகு மூன்று நாட்களுக்கு தனி அறையில் உணவு கொடுத்து பாதுகாக்கப்பட்டு பிறகு தெருக்களில் விடப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் நாய்களின் எண்ணிக்கை வெகு விரைவில் குறைந்து தெருக்களில் நாய்களே இல்லாத நிலை ஏற்படும். இவ்வாறு வரதராஜ் கூறினார்.