தினமலர் 02.09.2010
நீர்வழித் தடங்கள் சீரமைப்பு பணி முடிந்தால் வெள்ளப்பெருக்கு இருக்காது
சென்னை:””நகரில் வெள்ளப்பெருக்கை தடுக்க நீர்வழித் தடங்கள் சீரமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்,” என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.நுங்கம்பாக்கம் கால்வாய் நான்கு கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடக்கிறது. அந்த பணியை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை ஆய்வு செய்த போது கூறியதாவது:
மழைக் காலங்களில் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசின் ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 1,448 கோடி ரூபாய் மதிப்பில், நீர்வழித் தடங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரில் கூவம், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் போல், 22 நீர்வழித் தடங்கள் தூர்வாரி ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுபோல் நுங்கம்பாக்கம் கால்வாய் ஆயிரம் விளக்கு பகுதியில், 900 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலத்திற்கு அகலப்படுத்தி, ஆழப்படுத்தி கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணி நான்கு கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் நடக்கிறது.நீர்வழித் தடங்களில் எட்டு அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர்கள் அமைத்து, அதன் மீது நான்கு அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைக்கப்படும். இதனால், பொதுமக்கள் நீர்வழித் தடங்களில் குப்பை போடுவது தடுக்கப்படுவதுடன், மழைநீர் தேங்காமல் எளிதில் வடியும் வகையில் சீரமைக்கப் படுகிறது.
22 நீர்வழித் தடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தால் மழைக் காலங்களில் நகரில் வெள்ளப்பெருக்கு இருக்காது.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன் மழைநீர் வடிகால்வாய் துறை கண்காணிப்பு பொறியாளர் மதியழகன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.