தினகரன் 30.09.2010
நூறு ஆண்டை நெருங்குகிறது ரிப்பன் மாளிகை அஞ்சல் உறை வெளியீடு
சென்னை, செப்.30: மாநகராட்சி ‘ரிப்பன் மாளிகை’ நூறு ஆண்டு நெருங்குகிறது. இதையொட்டி, சிறப்பு அஞ்சல் உறையை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
உள்ளாட்சிகள் தின விழா, அகில இந்திய மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு, மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை கட்டிடம் 1913ம் ஆண்டு கட்டப்பட்டு, நூறு ஆண்டு நெருங்குவதையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் விழா, தி.நகரிலுள்ள சர்பிட்டி தியாகராயர் கலையரங்கில் நேற்று நடந்தது.
இதில் மேயர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கியும் பேசியதாவது:
மக்கள் பிரச்னையை நாள்தோறும் கேட்டறிந்து தீர்வு காணும் கவுன்சிலர்கள், பல்வேறு காரணங்களினால் பதட்டமான சூழ்நிலையிலேயே இருக்கிறார்கள். இதை மறந்து மகிழ்ச்சியாக இருக்கவும், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு உணர்வை ஏற்படுத்தவும், அகில இந்திய அளவில் மாநகராட்சிகளுக்கு இடையே இந்த போட்டியை இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி நடத்தி இருக்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை முதல்வர் கருணாநிதி பெற்று தந்தார். அது, விரைவில் ஆட்சிமொழியாக வரும் என்பதற்கு, மைசூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் புருஷோத்தம்மன் இங்கே தமிழில் பேசி நம்மையெல்லாம் கவர்ந்தாரே, அதுவே ஒரு சான்றாகும்.
சென்னை மாநகராட்சி பல்வேறு சாதனைகள செய்து வருகிறது. இதுவரை 6 விருதுகளை மாநகராட்சி பெற்றுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆவார். இன்று நடக்கும் முப்பெரும் விழாவை சேர்த்து, சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி, சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்க இருக்கும் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கும் பாராட்டு தெரிவிக்கும் விழாவாகவும் இது அமைந்துள்ளது. இவ்வாறு மேயர் சுப்பிரமணியன் பேசினார்.
சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் எம்.எஸ்.ராமானுஜம் பேசுகையில், “நூறு ஆண்டுகளை நெருங்கும் ரிப்பன் மாளிகையில் பணியாற்றும் மேயர் மா.சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர், சென்னை மாநகரத்தை புதுப்பொலிவுடன் மாற்றி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது” என்றார்.
கவுன்சிலர்களுக்கு இடையில் நடந்த 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தை பிடித்த மேயர் மா.சுப்பிரமணியத்துக்கு, சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷிணி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், ஆணையர் ராஜேஷ் லக்கானி, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை ரவி, மண்டலக்குழு தலைவர்கள் ஏழுமலை, தனசேகரன் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல் இடத்தை பிடித்தது ஹைதராபாத் மாநகராட்சி
மாநகராட்சிகளுக்கு இடையே நடந்த விளையாட்டு போட்டிகளில் சென்னை, ஹைதராபாத், மைசூர், பாட்னா, சூரத், கோவை, மதுரை, சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில் ஹைதராபாத் மாநகராட்சி 67 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 66 புள்ளிகள் எடுத்து சென்னை மாநகராட்சி 2வது இடத்தை பிடித்தது. திருப்பூர் மாநகராட்சி 39 புள்ளிகள் எடுத்து 3வது இடத்தை பிடித்தது.