நூலகப் புரவலர்களான நகராட்சி கவுன்சிலர்கள்
செய்யாறில், திருவத்திபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக நூலகப் புரவலர்களாக சேர்ந்துள்ளனர்.
உலக புத்தக தின விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில், ஏப்ரல் 23 முதல் மே 22 வரை ஒரு மாத காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து நூலகங்களிலும் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்களையும், 10 ஆயிரம் புதிய புரவலர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி திருவத்திபுரம் நகராட்சியைச் சேர்ந்த 27 நகரமன்ற உறுப்பினர்களும் திருவத்திபுரம் கிளை நூலகத்தில் புதிய புரவலர்களாக ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் இணைந்தனர்.
திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நூலகப் புரவலராக தலா ரூ.ஆயிரம் வீதம் 27 நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட 30 பேருக்கு மொத்தம் ரூ.30 ஆயிரத்தை திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் கே.என்.ராஜேந்திரனிடம் நகரமன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன் வழங்கினார்.
நகரமன்றத் துணை தலைவர் கே.எஸ்.செல்வராஜு, நகராட்சி ஆணையாளர் பி.கே.ரமேஷ், நகரமன்ற உறுப்பினர்கள் கே.வெங்கட்ராமன், பி.எஸ்.ஏகாம்பரம், கே.செந்தில், எஸ்.தனசேகர், கிளை நூலகர் கா.சக்திவேல், வாசகர் வட்ட பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.