தினமலர் 22.06.2010
நெல்லை மாநகராட்சியில் குடிநீர் பிரச்னை:போக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:தியாகராஜன்: கோவை செம்மொழி மாநாடு சிறக்க மா.கம்யூ., சார்பில் வாழ்த்துக்கள். செம்மொழி மாநாடு நடைபெறும் வேளையில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் தமிழில் மாணவர்கள் படிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐகோர்ட்டிலும் தமிழை வழக்கு மொழியாக்கவேண்டும்.சைபுன்னிஷா: மேலப்பாளையம் மயிலக்காதர் தெருவில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டிற்கு 365 நாட்களில 180 நாட்கள் மட்டுமே மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதிலும் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் குடிநீர் மோட்டார் ரிப்பேர் ஆகி குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது. குடிநீர் பிரச்னைக்காக அந்தப்பகுதி மக்கள் 3 முறை மறியலில் ஈடுபட்டுள்ளனர். எனவே குடிநீர் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விஸ்வநாதன்: மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் இருப்பவர்கள் சொல்வதை அதிகாரிகள் செய்யும் போது சில தவறுகள் ஏற்படக்கூடும். அப்போது அதிகாரிகள், அலுவலர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இந்த விஷயத்தில் சிலர் சொல்வதை கேட்டு முடிவு எடுக்காமல் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை நடத்தி கமிஷனர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது.சுப.சீத்தாராமன்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரிகள் உரிய மரியாதை கொடுக்கவேண்டும்.ரகுமத்பீவி: எனது வார்டில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டதால் சுத்தமாக உள்ளது. இந்த பணியை செய்த அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.பேபிகோபால்: கோடை காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு வார்டுக்கும் 2 அடிபம்பு, 2 ஓ.எச்.டி.டேங்க் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் யாரும் டெண்டர் போடவில்லை. எனவே ஒவ்வொரு வார்டாக பிரித்து டெண்டர் கோரினால் பணிகளை எளிதாக செயல்படுத்தலாம்.
கந்தன்: வண்ணார்பேட்டைக்கு புதிய குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அதுவரை புதிய குடிநீர் இணைப்புக்களை கொடுக்கவேண்டாம்.பேபிகோபால்: வ.உ.சி.மைதானத்தில் அமைச்சர் நிதியில் இருந்து நடைபாதை அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கி துரிதப்படுத்தவேண்டும்.மேயர்: வ.உ.சி.மைதானத்தில் நடைபாதை அமைப்பது சம்பந்தமாக பொதுப்பணித்துறையில் இருந்து விண்ணப்பிக்கவில்லை.சுப.சீத்தாராமன்: பொதுப்பணித்துறை பொறியாளரிடம் இருந்து மே 17ம் தேதியே அனுமதி கேட்டு கடிதம் மாநகராட்சிக்கு வந்துள்ளது.
மேயர்: அந்த கடிதத்தில் பிளான் இணைக்கப்படவில்லை. உரிய பிளான் கொடுத்தால் அனுமதி வழங்கப்படும்.
பிரான்சிஸ்: வ.உ.சி.திடலில் நடைபாதை அமைக்கும் பணிக்கான வேலையை மாநகராட்சியே செய்யலாமே. பொதுப்பணித்துறையிடம் ஏன் கொடுத்தீர்கள்.அப்துல்வகாப்: பேட்டை ஆஸ்பத்திரியில் இருந்த சித்த மருத்துவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான கோப்பு சென்னைக்கு அனுப்பபட்டுள்ளது. ஆனால் டாக்டர் இல்லாததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நிரந்தரமாக ஒரு டாக்டரை நியமிக்கவேண்டும்.
துரை: ஓ.எச்.டி.டேங்க் அமைப்பதில் காண்டிரக்டர்களுக்கு ரேட் போதுமானதாக இல்லை. ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. உறைகிணறு ஒரு இடத்திலும், தண்ணீரின் போக்கு வேறு இடத்திலும் உள்ளது. அதை சரிசெய்யவேண்டும்.அதிகாரி: தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.துரை: ஆண்டாள் தெரு, ராஜமன்னார் தெருவில் வால்வு பிரச்னையால் 7 மாதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனுமதியில்லாத குடிநீர் இணைப்புக்களை துண்டிக்கவேண்டும். உறை கிணறுகளுக்கு தண்ணீர் போக்கு செல்லும் படியாக தோண்டிவிடவேண்டும்.
ராஜேஸ்வரி: சர்தார்புரம், சரோஜினி தெரு பகுதிகளில் ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே தீர்வை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வீடுகளுக்கு தீர்வை நிர்ணியிக்கப்படவில்லை.யூசுப் சுலைகா: பாரதியார் தெரு உள்ளிட்ட தெருக்களில் குடிநீர் பிரச்னை உள்ளது.பிரான்சிஸ்: கே.டி.சி.நகர் பகுதியில் 8 ரோடுகள் சந்திக்கின்றன. ஆனால் இரவு நேரங்களில் அந்த சந்திப்பு பகுதியில் மின் விளக்கு வசதிகள் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி மூலம் மின் விளக்குகள் அமைக்கவேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.உணவுக்கூடத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர்.