தினமலர் 06.05.2010
பட்டுக்கோட்டையில் அகற்றப்பட்ட தியாகிகள் சின்னம் மீண்டும் அமைப்பு
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள நகராட்சி பொது சுடுகாட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இடம் சுத்தம் செய்யப்பட்டபோது தவறுதலாக அங்கிருந்த தியாகிகள் சிவராமன், இரணியன், ஆறுமுகம் ஆகியோரின் நினைவு சின்னம் இடித்து சுத்தப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய நினைவுச்சின்னம் அமைத்துத்தரும்படி கோரிக்கை விடுத்தனர். தமிழக முதல்வர் மற்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் அறிவுரைப்படி ஏற்கனவே நினைவுச்சின்னம் இருந்த இடத்தில் 10 அடி சுற்றளவில் 12 அடி உயரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் சிவராமன், இரணியன் மற்றும் ஆறுமுகம் ஆகியோருக்கு நினைவுச்சின்னம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட நினைவுச்சின்னத்தை நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், நகராட்சி தலைவர் பிரியாஇளங்கோ திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் இளங்கோ, தி.மு.க., நகர செயலாளர் சீனி அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.