தினமலர் 02.03.2010
பன்றிகள் ஒழிப்பில் அலட்சியம் : நகராட்சி தலைவர் எச்சரிக்கை
தேவகோட்டை: “”பன்றிகளை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விட்டால், நாங்களே அப்பணியை செய்ய வேண்டி வரும்,” என தேவகோட்டை நகராட்சி தலைவர் வேலுச்சாமி பேசினார். நகராட்சி கூட்டம் அவர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பாலமுருகன், கமிஷனர் செழியன் முன்னிலை வகித்தனர்.
விவாதங்கள் வருமாறு.
வசந்தகுமாரி (காங்.,): தெருக்களில் கருவேல மரம் மண்டிக்கிடப்பதால், விஷ பூச்சிகள் உள்ளன. பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அழகிமீனாள் (தி.மு.க.,): நகராட்சி கூட்டத்திற்கு முதல் நாள் மட்டும் சாக் கடை சுத்தம் செய் கின்றனர். தியாகிகள் ரோட்டில் மணல் குவியலாக உள்ளது.
மஞ்சுளாதேவி (தி.மு.க.,): கைலாசநாதபுரத்தில் கடந்த மாதமே ஆழ்துளை அமைக்கப்படும் என தெரிவித்தனர். இதுவரை பணிகள் துவங்கவில்லை.
திருநாவுக்கரசு (காங்.,): ஜீவா நகரில் முட்செடிகள் மண்டிக்கிடக்கின்றன.ராபீயா பீவி (அ.தி.மு.க.,): அருணாசல பொய்கையை சுற்றி, சுத்தம் செய்வதாக கூறி ஒரு மாதமாகியும் பணி நடக்கவில்லை.
செல்லமுத்து (அ.தி.மு.க.,): அதிகாரிகள் கூறும் வாக்குறுதிகளுக்கு தொடர் நடவடிக்கை இல்லை. வரி நிர்ணயம், பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
துணை தலைவர்: உயர் சிகிச்சை காப்பீடு திட்ட அட்டை, எனது வார்டில் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. பன்றிகள் தொல்லை பற்றி அதிகாரிகளிடம் கூறி அலுத்து விட்டது.
அன்பரசன் (சுயே.,): அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.
தலைவர்: பன்றிகளை சுடுவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் நடவடிக்கை இல்லை. நாங்களே சுட்டு தள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
கமிஷனர்: விலங்குகள் நலவாரியத்தின் ஒப்பதல் கிடைத்த பின் நடவடிக்கை துவங்கும்.
கேசவன் (தி.மு.க.,): நான்கு கொசு மருந்து கருவியும் பழுதாகிவிட்டன. மின் கம்பங்கள் மோசமாக உள்ளன. அதில் ஏறி பழுது பார்க்க ஊழியர்கள் மறுக்கின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.