பரமக்குடி நகராட்சி அலுவலக நகர்மன்ற கூட்ட அரங்கில் மாதாந்திர சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் எம்.கீர்த்திகா தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கே.அட்ஷயா வரவேற்றார்.
கூட்டத்தின் துவக்கமாக நகர்மன்ற தலைவரால் கொண்டு வரப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத சட்டப் போராட்டங்களால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பானது உச்ச நீதிமன்ற ஆணையின்படி அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியது: எம்.மகேஸ்வரி அதிமுக: ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் பங்குனி மாதம் 10 நாள் திருவிழா துவங்க உள்ளது. இப்பகுதியில் குப்பைகள் அதிகம் கொட்டப்படுவதால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஜி.கே.சாந்தி அதிமுக: 6-வது வார்டில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும், போதிய மின் விளக்குகள் பொறுத்த வேண்டும் என்றார்.
கே.ஆர்.கண்ணன் அதிமுக: பரமக்குடி-எமனேசுவரம் செல்லும் வைகை ஆற்று தரைப்பாலத்தில் கோழி இறைச்சி கழிவுகள், ஆழ்குழாய் அமைக்கும் போது ஏற்படும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எம்.கே.கண்ணன் அதிமுக: கைத்தறி நெசவாளர்களுக்கு அல்லுக்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதுடன், அதற்கான எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அப்பணியினை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நகராட்சி ஆணையாளர் கே.அட்ஷயா: உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் பழுது பார்த்ததற்கான செலவீனங்களுக்கு அனுமதி வழங்கியும், பரமக்குடி நகராட்சியில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிசைப் பகுதிகளில் ஏழைகளுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கும், நகராட்சி பகுதிகளில் கழிப்பிடம் கட்டும் திட்டம், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், புதிய அலுவலக கட்டடம், நவீன எரியூட்டு தகனமேடை என பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. தற்போது வைகை ஆற்றில் மணல் குவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. எனவே பரமக்குடி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அத்தியாவசிய அடிப்படை வசதி திட்டப்பணிகளுக்கு தேவையான மணல் பரமக்குடி வைகை ஆற்றில் பொதுப்பணித்துறையின் அனுமதியுடன் எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.முனியசாமி, ஆர்.சரவணன், எஸ்.சோபனா, ஆர்.முத்துக்குமார், ஆர்.குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.