தினமலர் 20.02.2010
‘பாதாள சாக்கடைக்கு பணம் கட்டினால்தான் பணி நடக்கும்’ மாநகராட்சி மிரட்டலால் பொதுமக்கள் அதிர்ச்சி
ஈரோடு: குடிநீர் குழாய் உடைப்பு என எந்த பணிக்கு சென்றாலும், “பாதாள சாக்கடை திட்டத்துக்கு “டிபாஸிட்‘ பணம் கட்டினால்தான் எந்த பணியும் நடக்கும்‘ என்று மாநகராட்சி மிரட்டுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“ஈரோடு மாநகராட்சியுடன், காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி ஆகிய நகராட்சிகளை இணைத்து பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும்‘ என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின் 2006 டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, 146 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது. இயக்கவும், பராமரிக்கவும் 54 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் ஆயுட்கால செலவாக கணக்கிடப்பட்டுள்ளது. இதை செயலாக்க உரிய நிதி பெற வழிவகைக்கு தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதிநிறுவனம் மூலம் அறிவுரை கேட்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு, “மானியமாக 10 கோடி, கூடுதல் மானியமாக 3.60 கோடி, கடனாக 71 கோடி, பொதுமக்கள் பங்கீடாக 61 கோடியே 89 லட்சம் வசூலிக்கலாம்‘ என்று அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், திட்ட மதிப்பீடு தவிர பணி நடக்கும் போது கடனுக்கு உண்டான வட்டி ஏழு கோடியே 32 லட்சம் ரூபாய் ஆகும். மொத்தம் 154 கோடி ரூபாய் செலவாகும்.
பொதுமக்களிடம் பங்கீட்டு தொகை வசூலிக்க கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது காலம் அமைதியாக இருந்த பாதாள சாக்கடை திட்ட விவகாரம் இப்போது வெடிக்கத் துவங்கியுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை காரணம் காட்டி, இரண்டாம் முறையாக திட்ட மதிப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட்டது. 240 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. பாதாளசாக்கடை திட்டம் நான்கு சிப்பங்களாக பிரித்து பணி துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சிப்பம்-1, சிப்பம்-2 பணி ஏலம் விடப்பட்டது. இதில், இரண்டாம் கட்ட மதிப்பீட்டை விட சிப்பம்-1க்கு 22.38 சதவீதமும், சிப்பம் மூன்றுக்கு 28.90 சதவீதம் அதிகமாக ஏலம் கோரப்பட்டது.
இதற்கு கடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், ஏலத்துக்கு அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, திட்டமிடப்பட்ட தொகையை விட நூறு கோடி ரூபாய் அதிகரித்துள்ள போதும், பணிக்கான தீர்மானம் கொண்டு வரும்போதும் திட்ட மதிப்பீட்டை விட 28 சதவீதம் வரை கூடுதல் விலை வைத்தே ஏலம் விடப்படுகிறது. இதுமக்களுக்கு மேலும் வரிச்சுமையை அதிகரிக்கும். இந்நிலையில், குடிநீர் குழாய் உடைப்பு, வேறு ஏதேனும் பணிக்காக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை சந்திக்க சென்றால், “பாதாள சாக்கடை திட்டத்துக்கு “டிபாஸிட்‘ கட்டினால்தான் எந்த பணியும் நடக்கும்‘ என்று கூறி அதிகாரிகள் கறாராக கூறுகின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே, கூடுதல் தொகையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் நிலையில் பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கறார் காட்டுவதால், மக்கள் மத்தியில் மேயர் குமார்முருகேஸ் செல்வாக்கை இழக்க நேரிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.