தினமணி 26.05.2010
பாதாள சாக்கடைக் குழாய் புதுப்பிக்கும் பணி இன்று முதல் தொடக்கம்: மேயர்மதுரை, மே 25: நேதாஜி சாலை முதல் சுப்பிரமணியபுரம் பம்பிங் ஸ்டேஷன் வரை பாதாள சாக்கடை குழாய்களைப் புதுப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கும் என்று மேயர் ஜி.தேன்மொழி தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குள்பட்ட 30 முதல் 43 வரையிலும், 60 முதல் 65 வரையிலான வார்டுகளில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தெற்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயர் ஜி.தேன்மொழி தலைமை வகித்தார். இதில் ஆணையர் எஸ்.செபாஸ்டின், மண்டலத் தலைவர் அ.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் மேயரிடம் வழங்கப்பட்டன.
டவுன்ஹால் ரோடு, சென்ட்ரல் தியேட்டர், ஜான்ஸிராணி பூங்கா ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாகவும், அதை உடனே சரி செய்ய வேண்டும் என்று கோரி மனுக்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மிகவும் பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் பதிக்கும் பணி உடனே தொடங்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். மற்ற மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக பெரியார் பஸ் நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டு வரும் பயணிகள் நவீன நிழற்குடைப் பணிகளை மேயர் மற்றும் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். இப்பணியை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கா.ரா.முருகேசன், ராஜேஸ்வரி, மாரியப்பன், மகேஸ்வரிபோஸ், செல்லத்துரை, விஜயா, பழனிச்சாமி, நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், நகரமைப்பு அதிகாரி முருகேசன், உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.