தினமலர் 15.05.2010
பார்க்கிங் வசதியில்லாத கட்டடம் மீது கூட்டு நடவடிக்கை : உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு கலெக்டர் உத்தரவு
திருப்பூர் : ‘பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக கட்டடங்கள் மீது மாநகராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் திட்டக் குழும அலுவலர்கள் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் உள்ளூர் திட்டக்குழும பகுதி விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் உள்ளூர் திட்டப்பகுதியில் ஏற்பட்டு வரும் அனுமதியற்ற கட்டுமானங்கள் குறித்தும், அதை தடை செய்ய உள் ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப் பட்டது. சட்டசபையில் அறிவித்தபடி, திருப்பூர் திட்டக் குழுமத்தின் எல்லையை விரிவாக்குவது குறித்து, கலெக்டர் மற்றும் திட்டக்குழும உறுப்பினர் செயலர் ஆலோசித்தனர்.
கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:உள்ளாட்சி பகுதிகளில் வரைபடம் ஒப்புதல் கோரி பெறப்படும் அடுக்குமாடி கட்டடம், பொது கட்டடம், கல்விக்கூடங்கள், வணிக வளாகங்கள் குறித்த விண்ணப் பங்களை, உள்ளூர் திட்டக் குழும பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். மாநகராட்சி பகுதியில் முதல்கட்ட மாக பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடு களில் வர்த்தக கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக கட்டடங்கள் மற்றும் மாநகராட்சி, உள்ளூர் திட்டக்குழும ஒப்புதல் பெறப்படாமல் அமைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்து மாநகராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்கள் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியற்ற மனைப் பிரிவுகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’அனுமதியற்ற மனைப்பிரிவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு வரைபடம் ஒப்புதல்; அதில் அமையும் கட்டடங்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்பட மாட்டாது; அனுமதியற்ற கட்டடத்தை கட்டட உரிமையாளர்கள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்‘ என அறிவிப்பு செய்ய வேண்டும்.
உள்ளூர் திட்டக்குழும பகுதிக்குள் அமையும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில், பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தலாம். இப்பகுதிகளில் இணைப்பு சாலை, சிறு பாலங்கள், பூங்காக்கள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் அமைக்க, உள் ளாட்சி அமைப்புகளின் பரிந்துரை யுடன், உள்ளூர் திட்டக்குழும நிதி உதவி பெறுவதற்காக, உத்தேச கருத்துருக்களை மாவட்ட நிர்வாகத் துக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் ஜீவானந்தம் கூறுகையில், ”முதல்கட்டமாக ஆலோசனை கூட்டம் போடப்பட்டுள்ளது. பகுதி வாரியாக பட்டியல் தயாரிக்கப்படும். படிப்படியாக அனைத்து விதிமுறை களும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமல்படுத்தப்படும்,” என்றார்.