பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் ஒரே நாளில் வழங்கப்படும் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என அதிகாரி தகவல்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஒரே நாளில் வழங்கப்படும் என்றும், அதற்காக இடைத்தரகர்களை யாரும் அணுக வேண்டாம் எனவும் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிறப்பு சான்றிதழ்
பள்ளிக்கூடத்தில் சேருவது முதல் பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் பிறப்பு சான்றிதழ் பெற பெற்றோர்கள் மாநகராட்சியில் காத்து கிடப்பதைக் காணலாம்.
மேலும் பல பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகளுக்கான பிறப்பு சான்றிதழை வைத்து இருப்பார்கள். ஆனால் அந்த சான்றிதழில் ஆண் அல்லது பெண் என்று மட்டும்தான் இருக்கும் குழந்தையின் பெயர் இருக்காது. இன்னும் சிலர் வைத்திருக்கும் சான்றிதழ்களில் தாய் அல்லது தந்தையின் பெயரில் எழுத்து பிழை இருக்கும். இது போன்ற தவறுகளை சரி செய்து புதிதாக பிறப்பு சான்றிதழ் பெறுபவர்களும் மாநகராட்சிக்கு சென்றுதான் ஆக வேண்டும்.
இறப்பு சான்றிதழ்
அது போல இறப்பு சான்றிதழும், இறந்தவரின் வாரிசு தாரர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுவதால் பலரும் அந்த சான்றிதழைப் பெற மாநகராட்சிக்கு செல்வதை தினமும் காணலாம். மாநகராட்சிக்கு செல்ல முடியாதவர்கள், லீவு கிடைக்காதவர்கள் இடைத்தரகர்களை அணுகி அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து மேற்கண்ட சான்றிதழ்களை பெற்றுச்செல்கிறார்கள்.
பிறப்பு–இறப்பு சான்றிதழ்களை பெற நடைமுறை தான் என்ன? அதற்காக யாரை அணுக வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரியம்வதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
தபால் பெட்டியில்…
புதிதாக பிறப்பு சான்றிதழ் பெற அல்லது பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் போன்றவைகளை செய்து சான்றிதழ் பெற விரும்புபவர்கள், அதற்குரிய தகவல்களை இணைத்து, உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், சுயவிலாசமிட்ட கவரில், தபால் தலைகளை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் சேர்த்தால் போதும்.
பின்னர் அந்த தபால்கள் அனைத்தும் சுகாதார துறைக்கு அனுப்பப்படும். அங்குள்ள அலுவலர்கள் அந்த தபாலை பிரித்து பார்த்து விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஆய்வு செய்வார்கள். விண்ணப்பத்துடன் இணைத்துள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், பிறப்பு சான்றிதழ் மறுநாள் தபாலில் அனுப்பிவைக்கப்படும்.
இதுதவிர விண்ணப்பதாரருக்கு ஏதாவது சந்தேகமோ அல்லது விளக்கமோ தேவைப்பட்டால் மாநகராட்சி அலுவலரிடம் நேரில் விண்ணப்பத்தை கொடுத்து மறுநாள் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
இறப்பு சான்றிதழ் பெறவும் இதே நடைமுறைதான்.
இடைத்தரகர்கள்
பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு நகர் நல அலுவலர் பிரியம் வதா கூறினார். அப்போது துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் உடன் இருந்தார்.