பிறப்பு, இறப்பு சான்றிதழ் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை
மதுரை:”பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, இடைத்தரர்களை அணுக வேண்டாம். தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மதுரை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் எச்சரித்துள்ளார். “தினமலர்’நாளிதழ் செய்தியால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நகர்நலப் பிரிவில் விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும்; ஆனால், மாநகராட்சியில் பணம் கொடுத்தால்தான், சான்றிதழ் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதுபற்றி, “தினமலர்’ நாளிதழ், நேற்று முன்தினம், செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, பிறப்பு, இறப்பு பதிவுப் பிரிவில், உதவி நகர்நல அலுவலர் பிரியா ஆய்வு செய்து, சான்றிதழ்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து நேற்று, “தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. கமிஷனர் நந்தகோபால் அறிக்கை: பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி, தினமும் 200 முதல் 300 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில், 50 விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாமல், தாய், தந்தை மற்றும் பிறந்த தேதியில் மாறுதல் உள்ளதால் உடனடியாக சான்றிதழ் வழங்க முடியவில்லை.
பிற விண்ணப்பங்களுக்கு உடனடியாக, சுகாதார ஆய்வாளர் கையெழுத்திட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.மக்கள் நேரடியாக, தகவல் மையத்தில், விண்ணப்பிக்கலாம்; இடைத்தரகர்களை அணுக வேண்டாம். இடைத்தரகர்கள் அணுகினால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிறப்பு சான்றிதழ்களை, ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, குறிப்பிட்டுள்ளார்.