தினமணி 15.05.2017
பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட வேண்டியது திருக்கோயில் வளாகங்களிலா? அல்லது தனி நபர் மனங்களிலா?
By கார்த்திகா வாசுதேவன் |
Published on : 15th May 2017 03:57 PM | அ+அ அ- |
தமிழகக்
கோயில்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனும்
சட்டம் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. ஆனால்
இப்போதும் தமிழகத்தில் பல இடங்களில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்
வளாகங்களில் பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் சரளமாகவே இருப்பது கண் கூடு.
ஹெல்மெட் சட்டம், பள்ளி வளாகங்களில் ஆரோக்கியமற்ற ஜங்க் புட் வகையறாக்களைத்
தடை செய்தல் என்ற சட்டங்களைப் போலவே பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்வதற்கான
சட்டமும் கவனிப்பாரற்று கிடப்பில் போடப்பட்டுவிட்டதோ என்று சந்தேகமாக
இருக்கிறது. ஏனெனில், மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்பைப் பெறாத எந்த ஒரு
தடைச் சட்டமும் இப்படித்தான் மேம்போக்கானதாக மாறும்.
நம் மக்களுக்கு
பிளாஸ்டிக்கின் அபாயத் தன்மை வெகு நன்றாகத் தெரியும். மக்களின்
உணர்வுகளைப் புரிந்து அரசும் திருக்கோயில் வளாகங்களில் பிளாஸ்டிக் பைகளைத்
தடை செய்ய சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பைகள்
ஓரளவுக்கேனும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டுமே?! ஆனால் அதுதான் இல்லை;
இப்போதும் தமிழகக் கோயில் வளாகங்கள் மற்றும் கடைகளில் தாராளமாக பிளாஸ்டிக்
பைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதை யார் தடுப்பது?
எப்படித் தடுப்பது? தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை
கோயில்களில் பிளாஸ்டிக் பைகள் தடை என்பது வெறும் ஏட்டளவில்தான் உள்ளது.
என்ன தான் அரசு அதிகாரிகள் ரெய்டு நடத்தி கோயில் வளாகங்களில் பிளாஸ்டிக்
பைகளின் சரளமான புழக்கத்தை கண்டு பிடித்து அபராதங்கள் விதித்து வந்த
போதிலும் இந்த விஷயத்தில் மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு
வரக்காணோம். இந்நிலையில் சர்வ சாதாரணமாகப் பிளாஸ்டிக் பைகளில் பிரசாதப்
பைகள் முதற்கொண்டு அனைத்தும் கிடைக்கும் நிலையானது, இதற்காகப் போராடி வரும்
சூழல் நலன் சார்ந்த சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதே
பக்கத்து மாநிலமான கேரளாவைப் பாருங்கள்; அங்கே பல பெரிய கோயில்களில்
பிளாஸ்டிக் பைகள் அறவே இல்லை. கோயிலைச் சுற்றியுள்ள கடைகளிலும் சணல்நார்ப்
பெட்டிகள், கூடைகள், துணிப்பைகள் போன்றவையே தரிசனத்தின்போது அர்ச்சனைப்
பொருட்களை வாங்கிச் செல்ல விநியோகிக்கப்படுகின்றன. அங்கே
பொதுமக்கள் சட்டத்தை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது
மலையாளிகளுக்கு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு
அதிகம் என்று எடுத்துக் கொள்வதா? இந்த விசயத்தை எப்படி விளங்கிக்
கொள்வதெனப் புரியத்தான் இல்லை.
ஏனெனில்; நமது
மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், கடந்த ஃபிப்ரவரி
மாதம் நடத்தப்பட்ட ஒரு ரெய்டில், தடை செய்யப்பட்ட (50 மைக்ரானுக்கும்
குறைவான) பிளாஸ்டிக்கில் தயார் செய்யப்பட்ட பைகள் ஸ்டாக் செய்யப்பட்டு
புழங்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மதுரையில் ரெய்டு முயற்சியை
மேற்கொண்ட கார்ப்பரேஷன் கமிஷனர் சந்தீப் நந்தூரி, இதற்காக சூழலியல்
ஆர்வலர்கள் கொண்ட 5 குழுக்களை அமைத்து கோயிலைச் சுற்றியுள்ள கடைகள்
அனைத்திலும் ஒரு கடை பாக்கியின்றி சோதனைகளை மேற்கொண்டதில், 22 கடைகளில்
தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திக்கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
மேலும் அங்குள்ள கடைகளில் ஸ்டாக் செய்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400
கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு பிளாஸ்டிக் பைகள்
பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் இருந்து 18000 ரூபாய்க்கும் அதிகமான தொகை
அபராதமாகவும் வசூலிக்கப்பட்டிருந்தது என்பது செய்தி.
அதோடு பறிமுதல்
செய்ததைத் தொடர்ந்து கமிஷனர் பொது மக்களிடம் பேசுகையில், பிளாஸ்டிக் பைகளை
ஒழிப்பதில் அரசுடன் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்; மக்கள் போதிய
விழிப்புணர்வுடன் ஒருங்கிணைந்தால் அன்றி இந்த விஷயத்தில் வெற்றி
காண்பது கடினம் என்றும் கூறி இருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்து மூன்று
மாதங்கள் கடந்துவிட்டது. இப்போதாவது நிலைமை மாறி இருக்கிறதா எனில்? அதுவும்
சந்தேகத்திற்கிடமானதுதான்.
இதில் தவறு
எங்கிருந்து தொடங்குகிறது? எல்லாவற்றுக்கும் அரசைக் குறை
கூறிக்கொண்டிருக்கும் பொதுமக்களான நாம் இவ்விஷயத்தில் செய்துகொண்டிருப்பது
என்ன? பிளாஸ்டிக் பைகளை பகிஷ்கரிக்கும் விஷயத்தை நாம் கோயில்களில் இருந்து
தொடங்குவது என்பது, கடவுளின் பெயர் கொண்டு நாம் செய்துகொண்டிருக்கும்
பெரும்பாலான சம்பிரதாயச் சடங்குகளைப் போலவே பிற்காலத்தில் வெறும் சடங்காக
மாறிவிடக் கூடாது. அதை நாம் நமது வீடுகளில் இருந்தல்லவா தொடங்க வேண்டும்!
இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால், அதை நாம் ஒவ்வொருவரும் நமது
ஆழ்மனங்களில் இருந்தல்லவா தொடங்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் இனிமேல்
தன் வாழ்வில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கவே போவதில்லை என்று
முடிவெடுத்துவிட்டால், பிறகு அந்த முடிவை எவர் தடுப்பர்? பிளாஸ்டிக் பைகள்
தடை விவகாரத்தில் தனிநபர் நினைத்தால் எத்தனையோ விதங்களில் மாற்றங்களைக்
கொண்டு வரலாம்.
- ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், மாமிசக்
கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் என எங்கு செல்வதாக இருந்தாலும்
வீட்டிலிருந்தே சணல் பைகள் அல்லது துணிப்பைகளை கையோடு எடுத்துச் செல்லும்
பழக்கங்களை பொது மக்கள் கடைப்பிடிக்கலாம். - கோயில் விழாக்களில் பிரசாதப் பைகள் வழங்க
முன்வரும் ஸ்பான்ஸர்கள், கண்டிப்பாக துணி அல்லது சணல் பைகளில் மட்டுமே
பிரசாதம் வழங்கப்படும் என ஆரோக்கியமான முடிவுகளை எடுக்கலாம். - மெடிக்கல் ஷாப்புகளில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக தரமான காகிதப் பைகளைத் தர முடிவு செய்யலாம்.
- துணிக்கடைகளில் கூட பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணி அல்லது சணல் பைகளே தரப்பட வேண்டும் என நிர்பந்திக்கலாம்.
ஆரம்பத்தில் துணி மற்றும் சணல்
பைகளுக்கு அதிகப்படியான கட்டணமாக ஓரிரு ரூபாய்கள் செலவானாலும் போனால்
போகிறது…. எல்லாம் நமது சுற்றுப்புறச் சூழலைக் காப்பதற்காகவும், எதிர்கால
சந்ததியினரின் தரமான வாழ்வாதாரத்துக்காகவும்தான் என்பதை மனதில் கொண்டு
இந்த விஷயங்களில் நாம் தெளிவுடன் சிந்திக்கத் தொடங்கினால் நிச்சயம்
பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழித்துவிடலாம். மாறாக,
பிளாஸ்டிக்
பைகளைப் புறக்கணிக்கும் நோக்கில் மளிகைக் கடைகள் அல்லது சூப்பர்
மார்கெட்டுகளில் பிளாஸ்டிக் பைகள் இல்லை என விற்பனையாளர்கள் கை
விரிக்கும்போது அவர்களிடம், என்ன
இப்படிச் சொல்லுகிறீர்கள்? நான் உங்களுக்கு ரெகுலர் கஸ்டமர், என்னிடமே
இப்படிச் சொல்வீர்களா? உங்கள் கடையில் பொருள் வாங்கிவிட்டு நான் எந்த சொந்த
செலவில் பையும் வாங்கி பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுமா? அடுத்த முறை
எப்படி உங்கள் கடையில் பொருட்கள் வாங்கத் தோன்றும்? எனக் கோபத்தில்
குமுறக்கூடாது. பெரும்பாலான இடங்களில் வாடிக்கையாளர்கள் இப்படி மல்லுக்கு
நிற்பதால்தான், மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகளில் இப்போதும்
பிளாஸ்டிக் பைகளை தடை செய்யவே முடியாமல் இருக்கிறது.
இந்த
தடைச் சட்டத்தை சாத்தியமாக்க, முதலில் பொது மக்கள் தங்களது மனதை
பிளாஸ்டிக்குக்கு எதிராக தயார் செய்துகொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும்,
எந்தச் சூழலிலும் நான் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தப்போவதில்லை என மக்கள்
ஒவ்வொருவரும் தங்களுக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டால் ஒழிய இதை ஒழிப்பது
கஷ்டமே!
பிளாஸ்டிக் பைகள் தடை விஷயத்தில் அரசின் பங்கு –
- மகளிர் தன்னார்வ குழுக்கள் மற்றும் அரசு
தொண்டு நிறுவனங்கள் மூலமாக பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பைகளை
ஏராளமாகத் தயாரித்து புழக்கத்தில் விடலாம். துணிப்பைகள், பிளாஸ்டிக்
பைகளைக் காட்டிலும் சற்று விலை கூடுதலானாலும் நீடித்து உழைக்கக் கூடியவை
என்பதோடு, பயன்படுத்த முடியா நிலையில் தூக்கி எரியும்போது, பிளாஸ்டிக்
பைகள் போன்று பூமிக்கு கேடு விளைவிக்கும் வகையில் நச்சுத்தன்மை கொண்டவை
அல்ல என்பதை அரசு மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். - திரையரங்குகள்தோறும் புற்றுநோய்க்குக்
காரணம் சிகரெட் எனும் விளம்பரங்களுக்கு ஈடாக, புவி வெப்பமயமாகி பருவ மழைகள்
தப்பிப்போவதற்கு காரணம், மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளே எனும்
வாதத்தை தீவிரமாக முன் வைக்கும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட வேண்டும்.
அம்மாதிரியான விளம்பரங்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டு அவை
திரையரங்குகளில் ஒவ்வொரு ஷோவின் முன்பும் ஒளிபரப்பாக வேண்டும் என விதிகள்
வகுக்கப்பட வேண்டும். - அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை
வாயிலாக கிராமம் கிராமமாகச் சென்று பிளாஸ்டிக் பைகள் எப்படியெல்லாம் கேடு
விளைவிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் ஆவணப் படங்களை மக்கள் கூடும்
பொது இடங்களில் திரையிட வேண்டும். - சுற்றுப்புறச் சூழலுக்கு மட்டுமல்ல, தனி
நபர் வாழ்விலும் பிளாஸ்டிக் உபகரணங்களால் விளையும் கேடுகளைப்
பட்டியலிட்டு, பகவத் கீதைபோல ஃப்ரேம் போட்டு அரசு அலுவலகங்களின்
முகப்புகளில் மாட்டச் செய்யலாம்.
பிளாஸ்டிக் பைகள் தடை விவகாரத்தில் பொது மக்கள் பங்கு –
மக்கள்
தங்களது வாழ்வில் எக்காரணம் கொண்டும் இனி பிளாஸ்டிக் பைகளைப்
பயன்படுத்துவதே இல்லை எனும் முடிவெடுப்பது தவிர, இவ்விஷயத்தில் அவர்கள்
செய்வதற்கான சாலச் சிறந்த பணி வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
பிளாஸ்டிக் பைகள் தடை சட்டத்தில் அரசின் கட்டுப்பாடுகள் மற்றும்
தண்டனைகளைக் காட்டிலும், தனி நபர் உறுதிகள் மிக நல்ல மாற்றத்தை
உண்டாக்கவல்லவை.
பிளாஸ்டிக் பைகளாள் விளையும் கேடுகள்
தினம்தோறும்
காய்கறிக் கடை முதல் துணிக்கடைகள், மெடிக்கல் ஷாப்புகள், உணவு விடுதிகள்,
சிற்றுண்டிச் சாலைகள், புத்தகக் கடைகள், மருத்துவமனைகள் என அனைத்து
இடங்களில் இருந்தும் நாம் பெறும் பிளாஸ்டிக் பைகளை, நாம் முறையாகப்
பயன்படுத்திவிட்டுத்தான் பிறகு குப்பையில் எறிகிறோமா? யோசித்துப்
பார்த்தால், அப்படியில்லை என்றுதான் கூற வேண்டும்.
தனியாகக்
காசு கொடுத்து வாங்குவதில்லை என்பதால், நாம் பெரும்பாலும் குப்பைகளை
சேகரித்துக் கொட்ட காலியான அல்லது உபரியான பிளாஸ்டிக் பைகளையே
பயன்படுத்துகிறோம். இந்த பிளாஸ்டிக் பைகள் பிறவற்றைப்போல மண்ணில்
வீசப்படும்போது, உடனடியாகவோ அல்லது சில மாதங்களிலோ மட்கக்கூடியது
அல்ல. குப்பைகளை சேகரித்து வீசும்போது அவை தனித் தனியாக தாறுமாறாகச்
சிதறி குப்பை தனியாக, பை தனியாகச் சிதறி காற்றில் பறந்து, மரக்கிளைகளில்
சிக்கி சின்னாபின்னமாகிறது. இதில் சில, வேகமாக வாகனம் ஓட்டி வரும் இரு
சக்கர வாகன ஓட்டிகளின் முகத்தில் வந்து மோதும். இதன் காரணமாகக்கூட மோசமான
விபத்துகள் நேர்ந்திருக்கின்றன.
|
விபத்துகள்
மட்டுமல்ல; நெடுநாள் துயரமாக இந்த பிளாஸ்டிக் பைகள் மண்ணில் புதையுண்டு,
மண்ணின் மேற்பரப்பை மூடி பூமியின் சுவாசத்தையே கூட தடை செய்துவிடுகிது
என்றால் நம்புவீர்கள்தானே?! போதக்குறைக்கு, நம் மக்கள் சமீப காலங்களில்
ஊருக்கு ஊர் காங்கிரீட் தெருக்களை வேறு அமைத்துக்கொள்கிறார்கள். மொத்தமாக,
பூமியின் உயிர்ப்பை நிஷ்டூரமாக நிராகரிக்கும் செயல் இது. இப்படிச்
செய்வதால், பூமியின் மேற்பரப்பில் பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு படலமாக மூடி,
மழை நீர் பூமிக்குள் ஊடுருவ இயலாத வகையில் தடையாகிவிடுகிறது. இதன்
பிற்காலப் பலனைத்தான் குடிநீர் பற்றாக்குறை என்று மாநகரங்கள் இன்று
அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
பிளாஸ்டிக்
பைகளை உண்ணும் பசுக்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றைச் சென்னையில்
காணலாம். மேய்ச்சல் நிலங்கள் குறைவான சென்னை போன்ற மாநரங்களில் பசுக்களும்,
பன்றிகளுக்கும், நாய்களுக்கும் ஒரே உணவாதாரம் கார்ப்பரேஷன் குப்பைத்
தொட்டிகளே! அவற்றில் உணவுப் பொருட்களோடு சேர்த்து பிளாஸ்டிக் பைகளையும்
உண்டு இரப்பை கிழிந்து இறந்து போன கால்நடைகள் அனேகம் இருக்கலாம். அதைப்
பற்றிய சரியான புள்ளி விவரங்கள் இல்லை.
மொத்தத்தில்,
பூமியின் சுவாசத்தை தடை செய்யக்கூடிய இந்த பிளாஸ்டிக் பைகள் தடை
செய்யப்பட்டால் ஒழிய, இந்த விஷயத்தில் நற்பலனை நாம் எதிர்பார்த்துக்
காத்திருப்பதில் அர்த்தமே இல்லை எனலாம்.
இந்தக்
கட்டுரையின் உண்மைத் தன்மையை படித்து உணரும் வாசகர்கள், தயவு செய்து
உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும். இதுபோன்ற தனிமனித சுதந்திரம், உரிமைகள்,
சுற்றுச்சூழல் கேடுகள், பொதுநலன் சார்ந்த பல்வேறு விஷயங்களில் இதுபோன்ற
கட்டுரைகளை வெளியிட்டு வாசகர்களின் கருத்தை அறிய தினமணி முயற்சி
மேற்கொண்டுள்ளது.
முயற்சிக்கு உதவுங்கள்! நன்றி.