தினமணி 26.12.2011
புதை சாக்கடை திட்டத்தில் நகராட்சி பங்குத் தொகை அளிப்பு
தஞ்சாவூர் நகரில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் 23.6.2003-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், ஒரு தலைமை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 5 கழிவுநீர் நீரேற்று நிலையம், 9 கழிவுநீர் உந்து நிலையம், ஆள் இறங்கும் குழிகள் 10,059 ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
கழிவுநீர் பிரதான குழாய் 259.78 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டு, கடந்த 27.9.2007-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தமிழக அரசுப் பங்குத்தொகை ரூ. 21.65 கோடி, மத்திய அரசுப் பங்குத் தொகை ரூ. 24.39 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
நகராட்சியின் பங்குத் தொகை ரூ. 16.62 கோடியில், முதல் கட்டமாக ரூ. 13.30 கோடி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, ரூ. 76.03 லட்சம் இரண்டாம் கட்ட பங்குத் தொகையை நகராட்சித் தலைவர் சாவித்திரிகோபால் அளிக்க, குடிநீர் வடிகால் வாரிய உதவிச் செயற்பொறியாளர் லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் சேகர், நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், பொறியாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.