பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை
பெங்களூரில் டெங்கு காய்சல் பரவாமல் தடுக்க பெங்களூர் மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துவருகிறது.
இது குறித்து பெங்களூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்மைகாலமாக பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. கொசுமூலம்பரவும் டெங்குகாய்ச்சல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர்சித்தையா ஆலோசனை நடத்தினார். 2012-ஆம் ஆண்டில் பெங்களூரில் 1041 பேர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்தனர். 2013-இல் 66 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர்.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கொசு மருந்துள்ள புகை அடிக்கப்பட்டுவருகிறது. எனினும், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஆணையர் அறிவுறுத்தினார்.
2 முதல் 7 நாள்களுக்கு தொடர்ந்துகாய்ச்சல் இருந்தால், அத்துடன் தலைவலி, கண்களின் பின்புறம் வலி,கைகால் வலி, மூட்டுவலி, வாந்தி, உடல்சோர்வு ஏற்பட்டால் மாநகராட்சி பரிந்துரை மருத்துவமனைகளில் பொதுமக்கள் ரத்த சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்கள் சுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, தொற்றுநோய் பரவாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பொதுமக்கள் பின்பற்ற வேண்டியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தேங்கியுள்ள சுத்தநீரில் கொசு இனப்பெருக்கம் செய்வதால், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகள், மேல்தொட்டிகளை முழுமையாக காலிசெய்விட்டு பின்னர் தண்ணீர் நிரப்ப வேண்டும். வெளியே வீசப்படும் உடைந்த மண்பாண்டம், பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் குடுக்கை(மூடி),டயர்கள், ஏர்கூலர், பூந்தொட்டிகளில் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கொசு வராமல் தடுக்க ஜன்னல், கதவுகளில் வலை பொருத்த வேண்டும். கொசுவலையின்கீழ் படுக்க வேண்டும். கொசுக்களை அழிப்பது தொடர்பாக புகார்கள் இருந்தால், 080-22660000 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.