பெண்கள் அனைத்து துறைகளிலும் அச்சமின்றி முன்னேறி வருகிறார்கள்
திருப்பூர்: பெண்கள் அச்சமின்றி அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் என திருப்பூரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் மேயர் விசாலாட்சி பேசினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சேவ் மற்றும் திருப்பூர் வட்டார மகளிர் கூட்டமைப்புகள் இணைந்து நடத்திய “தொழில் வளம் பெருக்குவதில் மகளிர் பங்கு“ என்னும் தலைப்பில் மகளிர் மாநாடு திருப்பூர், வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேவ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் அலேசியஸ் தலைமை வகித் தார்.ரோஸ்லின் தங்கம் வரவேற்றார். கூட்டமைப்பின் பொறுப்பாளர் கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் நாகபிரபா, இணைப்பதிவாளர் ராமகிருஷ்ணன், கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு இயக்குனர் தியாகராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மேயர் விசாலாட்சி கலந்துகொண் டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, ‘நாம் வாழும் நாட்டை தாய்நாடு என்கிறோம், பேசும் மொழியை தாய்மொழி என்கிறோம், ஓடும் நதிகள் எல்லாம் பெண் பெயரால்தான் அழைக்கப்படுகின்றன.
கல்வி, செல்வம், வீரம் என நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாமே பெண்கள்தான். எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உல கில் தாய்வழி சமூகம்தான் இருந்தது. அடர்ந்த காடுகளில் பெண்கள் தலைமையில்தான் அரசாங்கமே நடந்தது. அன்றே பெண்கள் வேட்டையாடுவதிலும்,வீடு கட்டுவதிலும், முன்னணியில் இருந்தனர். ஆதிகாலத்தில் மனித சமூகத்தின் மூலமாகவும், பெரும் சக்தியாகவும் பெண்கள் தான் இருந்தனர்.
அது மட்டுமல்லாமல் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருந்து சிறப்பாக பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் என்ற பெண் 6 முறை விண்வெளிக்கு சென்று பெண்குலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கல்வி, வேலை, சுயதொழில், கலை, இலக்கியம் என அனைத்து துறைகளிலும் இன்றைக்கு பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள். நிலவுக்கு சென்றுவரக்கூடிய அளவுக்கு துணிச்சல்மிக்கவர்களாக பெண்கள் வளர்ந்து வருகிறார்கள்.
கருவறையை கொண்ட ஆலயமும், பெண்களும் வணங்கப்பட வேண்டியவர்கள். பெண்கள் அச்சமின்றி தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். தோளில் துப்பட்டா போடும் பெ ண்கள் தேவைப்பட்டால் துப்பாக்கியும் போடும் அளவுக்கு துணிச்சல்மிக்கவர்களாக வளர்ந்து வருகிறார்கள்’ என பேசினார். விழாவையொட்டி நடத்தபட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் விசாலாட்சி பரிசுகள் வழங்கினார். விழா முடிவில் கூட்டமைப்பின் பொறுப்பாளர் தனலட்சுமி நன்றியுரையாற்றினார்.