பொதுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த முடிவு
ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுóள்ளது.
ராணிப்பேட்டை நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர் ராமதாஸ் பேசும்போது, வேலூர் மாநகராட்சி, அரக்கோணம் நகராட்சி உள்ளிட்ட இடங்களில் மின்சார தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ராணிப்பேட்டை நகராட்சியிலும் அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த தலைவர், மின்சார தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிதி பெற்று பணிகள் தொடங்கப்படும் என்றார்.
இதையடுத்து, தமிழக அரசு ஆணையின் படி ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட உள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொது உபயோக அடுக்கு மாடிக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, இந்த வசதிகளை கட்டட வரைபடத்தில் குறிப்பிட்டு அனுமதி பெறச் செய்வது, ஏற்கெனவே கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பொதுக் கட்டடங்களில் 180 நாள்களுக்குள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த கட்டட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.