தினமலர் 06.05.2010
பொள்ளாச்சி நகராட்சி கொண்டு வந்த தீர்மானத்தால் சந்தேகம் : ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? முறைப்படுத்தப்படுமா?
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் புற்றீசல் போன்று ஆக்கிரமிப்புகள் முளைத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில், நகராட்சி தலைவர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? அல்லது முறைப்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் பஸ் ஸ்டாண்ட் ரோடு, திரு.வி.க., மார்க்கெட் ரோடு, பாலக்காடு ரோடு, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய இரும்பு மார்க்கெட், காந்தி வாரச்சந்தையில் அங்கீகாரம் பெற்ற கடைகளை விட ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் முளைத்துள்ளன.
திரு.வி.க., மார்க்கெட் ரோடு, பாலக்காடு ரோடு, பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்திருந்தன. நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் போது, மீண்டும் தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தனர். அதனால் தள்ளுவண்டி கடைக்காரர்கள் கடை அமைக்கவில்லை. மாறாக, வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்து கொடுக்குமாறு நகராட்சியில் மனு கொடுத்தனர்.
அதனால், மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் பாலக்காடு ரோட்டில் தள்ளுவண்டி கடைகள் வைத்துக்கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களுக்கு டோக்கன் கொடுத்து, மாத வாடகை நிர்ணயம் செய்து வருகிறது. பொள்ளாச்சி முழுவதும் உள்ள தள்ளுவண்டி கடைகளை முறைப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் இருப்பது நிரந்தர ஆக்கிரமிப்புகள் தான். ரோட்டோரத்தில் இருக்கும் வணிக வளாகங்களின் சிறிதாக இருக்கும் கடைகளை வாடகைக்கு எடுப்பவர்கள் ரோட்டில் ‘செட்‘ அமைத்து தடுப்பு வைத்து பயன்படுத்துகின்றனர்.
இதனால், ரோட்டோரத்தில் நடந்து செல்லக்கூட இடமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். திரு.வி.க., மார்க்கெட் ரோட்டில் தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்திய அதிகாரிகள் தனியார் வணிக வளாகத்தினர் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதை அப்புறப்படுத்தவில்லை.
அதேபோன்று, காந்தி வாரச்சந்தை, பழைய இரும்பு மார்க்கெட்டில் அரசியல் கட்சிகளின் துணையுடன் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நிரந்த கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் ‘வாய்தா‘ கொடுத்துக்கொண்டே உள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்னையில் நகராட்சி அதிகாரிகள் நிலையான முடிவு எடுக்காமல் தடுமாறி வரும் நிலையில், நகராட்சி கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மேலும் பல கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.
நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தில், நகராட்சியின் ஆண்டு குத்தகை இனங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இனங்களை முறைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க நகரமைப்பு அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைக்கவும், குழு அறிக்கையை மூன்று மாதத்திற்குள் மன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், ஆக்கிரமிப்பு இனங்களை முறைப்படுத்தவும், புதிதாக ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும், புதிய கடைகள் அமைக்க கவுன்சில் அனுமதி பெறவும், குத்தகை இடங்களுக்கு புதிய மின் இணைப்பு பெறவும் நகராட்சி அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நகராட்சியில் தற்போதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுப்படுமா? அல்லது முறைப்படுத்தப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. நகரமைப்பு அலுவலர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் அனைத்து கட்சி கவுன்சிலர்களையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பதில் மட்டும் கவுன்சிலர்கள் குறியாக உள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி நகராட்சி சொத்தை பாதுகாப்பதில் கவுன்சிலர்கள் யாரும் அக்கறை கொள்ளவில்லை என்பது பொதுமக்களின் கருத்தாகும்.