தினமணி 12.03.2010
போடியில் பாதாளச் சாக்கடை பணிகள் விரைவில் தொடங்கும்
போடி, மார்ச் 11: போடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
போடியில் தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை வியாழக்கிழமை தலைமை வகித்து துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
போடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 18-ம் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கால்வாயை போடி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இலவச டி.வி. வழங்கப்படுமா? என சந்தேகம் எழுப்பிய நிலையில் தற்போது கலர் டி.வி.க்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
போடியில் பாதாள சாக்கடை அமைக்க விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நகராட்சிப் பகுதி மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்கள் விரைவாகவும், முழுமையாகவும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ரதியாபானு, துணைத் தலைவர் எம்.சங்கர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் க.சரவணக்குமார் வரவேற்றார். வட்டாட்சியர் ராஜசேகரன், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் இரணியன், வருவாய் ஆய்வாளர் கா.ரத்தினம், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்ணன், அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர். சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரத்தினம் நன்றி கூறினார்.
வட்டாட்சியர் ராஜசேகரன் தெரிவிக்கையில், போடி நகரில் 20 ஆயிரத்து 875 பேருக்கு இலவச கலர் டி.வி. வழங்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் சிலிப் வழங்கப்பட்டு பின் நகராட்சியில் டோக்கன் வழங்கப்பட்டு டி.வி. வழங்கும் பணி நடைபெறும். ஒவ்வொரு ரேஷன் கடை வாரியாக டி.வி. வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.