தினமலர் 09.04.2010
போதிய பாதுகாப்பு இல்லை: நகராட்சி வியாபாரிகள் அச்சம்
ஊட்டி: ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.ஊட்டி மார்க்கெட்டில் நகராட்சி தரப்பில் கடைகள் கட்டப்பட்டு, வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நகராட்சி மார்க்கெட்டை சுற்றி சுற்றுச்சுவர் உள்ளது; மார்க்கெட்டுக்குள் மக்கள் சென்று வர, 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு ‘கேட்‘ போடப்பட்டிருந்தது.
இரவு நேரத்தில் மக்கள் மற்றும் வியாபாரிகள் வெளியேறிய பின், கேட்கள் பூட்டப்படும். 18 இரும்பு கேட்டுகளில் தற்போது 7 கேட்கள் காணாமல் போய்விட்டன; மீதமுள்ளவையும் உடைந்து பழுதடைந்துள்ளன. மார்க்கெட் முழுவதும் 27 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதில், 9 தெரு விளக்குகள் எரிவதில்லை. 1,000த்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ள மார்க்கெட்டை இரவு நேரங்களில் பாதுகாகக்க, 3 கூர்க்காக்கள், 3 காவலர்கள் நகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டிருந்த நிலை மாறி 3 காவலர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், ஒருவர் ஓய்வு பெற்று விட்டதால் இருவர் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ‘டார்ச்‘களுக்கான பேட்டரிகள், போதியளவு வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், மக்களை விட கால்நடைகளின் ஆக்கிரமிப்பு தான் அதிகமாக உள்ளது. மார்க்கெட்டுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், நகராட்சி நிர்வாகம் பலப் படுத்த வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.