தினமணி 10.08.2009
மகளிர் மட்டும்‘ ரயில்களில் நவீன முன்னறிவிப்பு வசதி
சென்னை, ஆக. 9: சென்னையில் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கப்படவுள்ள மகளிர் ரயிலில் பல்வேறு நவீன கருவிகளுடன் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை எழும்பூர்– தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, மக்கள் குறைகள் கேட்டறிந்த பின் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் எம்.எஸ். ஜெயந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் மகளிர் மட்டும் ரயில் சேவையை, தாம்பரம் ரயில் நிலையத்தில் 12-ம் தேதி காலை 8.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
கடற்கரை– தாம்பரம் இடையே இயக்கப்படும் “மகளிர் மட்டும்‘ ரயில்களில் பொது அறிவிப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
செயற்கைக்கோள் உதவியுடன் கூடிய ஜி.பி.எஸ். தொழில்நுட்ப அடிப்படையிலான இவ்வசதி அனைத்து புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் படிப்படியாக ஏற்படுத்தப்படும்.
மகளிர் மட்டும் ரயில்களின் அனைத்து பெட்டிகளிலும் எலக்ட்ரானிக் பலகைகள் பொருத்தப்படும். இதில் அடுத்து வரும் ரயில் நிலையங்களின் பெயர் “ஒளிரும்‘ வகையில் அறிவிக்கப்படும்.
இதே போல ரயில் நிலையங்களில் அடுத்து வரும் ரயில்கள், நேரம் குறித்தும் இனிய குரலில் அறிவிக்கப்படும்.
இ–மெயில் செய்தி சேவை: இ–மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் முக்கிய செய்திகள், பொழுது போக்கு தகவல்கள், ரயிலின் இப்போதைய வேகம், வந்து சேரும் உத்தேச நேரம் குறித்து பயணிகள் அறியவும் வசதி செய்யப்பட உள்ளது.
இணையதளம் மற்றும் மொபைல் தொலைபேசிகளிலும் இவ்வசதியை பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
புறநகர் ரயில் நிலையங்களில் துரித உணவகங்கள்: ரயில் நிலையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்த ரயில்வே முன்னுரிமை அளிக்கும்.
இதே போல ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் புறநகர் ரயில் நிலையங்களில், “துரித உணவகங்களை‘ அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது என்றார் எம்.எஸ். ஜெயந்த்.