தினகரன் 24.08.2012
‘மக்களை தேடி மாநகராட்சி’ இரண்டு மண்டலங்களில் இன்று குறைதீர்ப்பு முகாம்
மதுரை, : மாநகராட்சி சார்பில் இரு மண்டலங்களில் இன்று குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சி சார்பில் மக்களைத் தேடி மாநகராட்சி என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வார்டுகளுக்குச் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுப்பார்கள். இதன்படி மண்டல எண் – 1 (மேற்கு ) 11 முதல் 15 வரையிலும் மற்றும் 20ம் வார்டுகளுக்கு ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் 7வது தெருவிலும், மண்டலம் – 2 (வடக்கு) 24, 25, 26, 48 ஆகிய ஐந்து வார்டுகளுக்கு நாகனாகுளம் வார்டு அலுவலகத்திலும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
இந்த முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம், பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், கட்டிட வரைபட அனுமதி, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, புதிய வரி விதிப்பு, பொட்டல் வரி, தெருவிளக்குகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு செய்யப்படும். நிகழ்ச்சியில் மேயர், துணைமேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற உள்ளனர். பொதுமக்கள் தங்கள் குறைகளை இம்முகாமில் தெரிவித்து பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.