தினமணி 19.03.2010.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி திருப்பூர் மாநகராட்சி ஆயத்தம்
திருப்பூர், மார்ச் 18: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துகி றது. அதன்படி, வரும் 2011-ம் ஆண்டு சென்சஸ் எனும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்காக வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை முன்னோ ட்ட கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது.
இக்கணக்கெடுப்பின் போது அடையாள அட்டைகள் மூலம் மக்களின் விபரங்களும் சேகரிக்கப்பட உள்ளன. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாள எண்களைக் கொண்ட இந்த அட்டைகளில் அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.
அதன்படி, திருப்பூர் மாநகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளன. அதற்காக மாநகராட்சி ஆணையாளர் ஆர்.ஜெயலட்சுமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் 850 ஆசிரியர்களைக் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 52 வார்டுகளுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கணக்கெடுப்பு ஊழியருக்கும் 125 வீடுகள் அல்லது 650 பேர் வசிக்கும் பகுதி என்று பிரித்து, கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பின் போது, வீட்டிலுள்ளவர்களின் முழுப்பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய், தந்தை, கணவன், மனைவி பெயர், வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் கேட்கப்படும். ஆகையில், இவ்விபரங்களை மக்கள் முன்னரே சேகரித்து வைத்து கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.